Published : 07 Sep 2023 09:12 AM
Last Updated : 07 Sep 2023 09:12 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | அரை இறுதியில் ஜோகோவிச், கோ கோ காஃப்

ஜோகோவிச்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் கோ கோ காஃப் ஆகியோர் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபனில் 3 முறை பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் அரை இறுதி சுற்றில் கால்பதிப்பது இது 13-வது முறையாகும். அதேவேளையில் ஒட்டுமொத்தமாக கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஜோகோவிச் அரை இறுதி சுற்றில் நுழைவது இது 47-வது முறையாகும். அரை இறுதியில் ஜோகோவிச், 47-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதுகிறார். பென் ஷெல்டன் கால் இறுதி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த 10-ம் நிலை வீரரான பிரான்சிஸ் தியாஃபோவை 6-2, 3-6, 7-6 (9-7), 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்றது.

20 வயதான பென் ஷெல்டன் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும். இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் கால் இறுதி சுற்று வரை ஷெல்டன் முன்னேறியிருந்தார். 1992-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறிய இளம் அமெரிக்கவீரர் என்ற பெருமையையும் பென் ஷெல்டன் பெற்றுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப், 20-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலினா ஒஸ்பபென்கோவாவை எதிர்த்து விளையாடினார். 68 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19 வயதான கோ கோ காஃப் 6-0, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அரை இறுதி சுற்றில் கோ கோ காஃப், 10-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா முச்சோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். கரோலினா முச்சோவா கால் இறுதி சுற்றில் 30-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சொர்னா கிறிஸ்டியாவை 6-0, 6-3 என்ற நேர் செட்டில் தோற்கடித்தார். 33 வயதான சொர்னா கிறிஸ்டியா இந்த சீசனில் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் 2-வது முறையாக அரை இறுதியில் நுழைந்துள்ளார். அவர், பிரெஞ்சு ஓபனில் 2-வது இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போபண்ணா ஜோடி அசத்தல்: ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 6வது இடம் வகிக்கும்இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது அமெரிக்காவின் நதானியல் லாம்மன்ஸ், ஜாக்சன் வித்ரோ ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (10-6) 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிசுற்றுக்கு முன்னேறியது. அரை இறுதியில் போபண்ணா ஜோடி பிரான்ஸின் பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட், நிக்கோலஸ் மஹுட் ஜோடியுடன் மோதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x