

எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக கே.எல்.ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் ஐயர் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்வார் என்பதால் மீதம் ஒரு இடத்துக்கு சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரது பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன.
இதில் 32 வயதான சூர்யகுமார் யாதவுக்கு தேர்வுக்குழுவினர் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் சாதனைகள் பெரிய அளவில் கூறும்படி இல்லை என்றாலும் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறனை கொண்டிருப்பதாக அணி நிர்வாகம் நம்புகிறது. இதனாலேயே மேற்கு இந்தியத் தீவுகளில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் திலக் வர்மா தேர்வாகவில்லை.
பின்வரிசையும் முக்கியம்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஆழத்தை உருவாக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக இது அணியில் இல்லை. பேட்டிங்கில் ஆழம் பற்றி பேசும்போது, 8 மற்றும் 9-வது நிலைகள் மிகவும் முக்கியமானதாகும்.
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கின் போது இறுதிப் பகுதியில் சரிவை சந்தித்தோம். பின் வரிசை வீரர்களிடம் இருந்து பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். அந்த ஆட்டத்தில் இன்னும் 10-15 ரன்கள் எடுத்திருந்தால் வித்தியாசம் இருந்திருக்கும். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசம் அது” என்றார்.