Published : 05 Sep 2023 11:08 PM
Last Updated : 05 Sep 2023 11:08 PM
சென்னை: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில் ஷிகர் தவான், சஞ்சு சாம்சன், அஸ்வின், சாஹல், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
ஐசிசி சொன்னபடி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தற்போது உலகக் கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் அடங்கிய அணியை அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, மொகமது சிராஜ், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, அக்சர் படேல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒருவரும் இந்திய அணியில் இல்லை. அணியின் டாப் ஆர்டர் வலது கை பேட்ஸ்மேன்களை அதிகம் கொண்டுள்ளது. கே.எல்.ராகுல் மற்றும் இஷான் கிஷன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணியில் இடம்பெறாத அந்த 7 வீரர்கள்: இடது கை பேட்ஸ்மென் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் தவான், சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன், லெக் ஸ்பின்னர் சாஹல், வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, இளம் இடது கை பேட்ஸ்மென் திலக் வர்மா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
இதில் அஸ்வின், திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரும் ரிசர்வ் வீரர்களாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், அறிவிக்கப்பட்ட அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை செப்டம்பர் 28-ம் தேதிக்குள் அணிகள் மாற்றம் மேற்கொள்ளலாம் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT