Published : 05 Sep 2023 01:19 PM
Last Updated : 05 Sep 2023 01:19 PM
நேபாளத்தை வீழ்த்தி ஆசியக் கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது, இயற்கை அன்னையின் அருளினால். ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இந்தப் பவுலிங்கை அடித்து நொறுக்கியதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்திய பேட்டிங்கில் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் எல்லாமே சுமாராகத்தான் இருக்கும் நிலையில் பவுலிங்கும் நேற்று சற்றே பின்னடைவு கண்டதைத்தான் பார்க்க முடிந்தது. பீல்டிங் பற்றி சொல்லவே வேண்டாம். 3 கேட்ச்களை முதல் 5 ஓவரில் ட்ராப் செய்தால் அந்த அணி கோப்பையை வெல்ல தகுதியான அணியா என்பதே நம் கேள்வி.
விராட் கோலி ஜிம்மில் செய்யும் சாகசங்களையெல்லாம் நொடிக்கு நூறு தரம் காட்டுகின்றனர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் அவர் பீல்டிங் பிராக்டீஸ் செய்வதை ஏன் காட்ட மறுக்கின்றனர். அவரும் ஒரு கேட்சை நேற்று விட்டார். நேபாள அணி பாகிஸ்தானுக்கு எதிராக சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கின்றது, ஆனால் இந்திய பவுலிங்கிற்கு ஏதிராக 10ஓவர்களில் 65/0 என்று ஆடுகின்றனர். பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரி என்ன செய்து கொண்டிருக்கிறார்?
ஆட்டம் முடிந்தவுடன் நேபாள் கேப்டன் ரோஹித் பாடெல் கூறியது இந்திய அணியின் பந்து வீச்சை அவர் எப்படி மதிக்கிறார் என்பதன் வெளிப்பாடே, “எங்கள் தொடக்க வீரர்கள் அருமையான ஆட்டம் ஆடினர். மிடில் ஆர்டரில் இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடியிருக்கலாம். நாங்கள் 30-40 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். மிடில் ஆர்டரில் நன்றாக ஆடியிருந்தால் 260-270 எடுத்திருப்போம், எங்கள் அணியின் கீழ்வரிசை பேட்டர்கள் கடந்த 4-5 மாதங்களாக அற்புதமாக ஆடுகின்றனர். எங்களுக்கு அவர்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.” என்கிறார்.
வாசிக்க> ஒருநாள் கிரிக்கெட்டில் மங்கும் இந்திய அணியின் கேட்ச் பிடிக்கும் செயல்திறன்!
அதாவது நேபாள் போன்ற அணி 10 விக்கெட்டுகளில் மேட்சைத் தோற்று விட்டு 260-270 எடுத்திருந்தால் வேறு கதையாகியிருக்கும் என்று பேசுகிறது என்றால் இது நேபாளின் திறமை பற்றிய கூற்று மட்டுமல்ல, ஹைப் செய்யப்பட்ட இந்திய பவுலிங்கின் உண்மையான நிலை பற்றிய கூற்றும்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அந்த அணியின் ஆசிஃப் ஷேக் நல்ல அரைசதம் ஒன்றை எடுத்தார். இவருடன் குஷால் பூர்டெல் என்பவர் இணைந்து இந்திய பந்து வீச்சை புரட்டி எடுத்தார் என்றே கூற வேண்டும். ஷமி எஃபெக்டிவ் ஆக இல்லை. சிராஜ் சாத்து வாங்கினார். சிராஜ் 9.2 ஓவர்களில் 61 ரன்கள் கொடுத்துள்ளார். 3 விக்கெட் பின்னால் எடுத்தது. இதில் 8 பவுண்டரி 2 சிக்சர்களையும் வாரி வழங்கியுள்ளார். அதாவது அவர் வீசிய மொத்தம் 56 பந்துகளில் 33 பந்துகள் டாட் பால்கள் என்றால் மீதமூள்ள 23 பந்துகளில் அவர் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 61 ரன்களைக் கொடுத்துள்ளார் என்று அர்த்தம். அதாவது பவுண்டரி பந்துகளை 23 பந்துக்கு 10 பந்துகள் என்ற வீதத்தில் வீசுகிறார் சிராஜ் என்று பொருள்.
நேபாள பேட்டர்கள் இந்திய வேகப்பந்து வீச்சை அனாயசமாக ஆடினார்கள் என்றே கூற வேண்டும், அதுவும் 'v' என்று அழைக்கப்படும் மிட் ஆன், மிட் ஆஃபில் பிரமாதமாக ஆடினர். விக்கெட் கீப்பருக்கு பின்னாலும் ‘ரேம்ப்’ ஷாட்டையும் திறம்பட பயன்படுத்தினர். பூர்டெல் தனக்கு 2 கேட்ச்களை விட்டதை சாதகமாக்கிக் கொண்டார். இவர் தான் நேற்றைய சிறந்த ஷாட்டை ஆடினார், எப்படியெனில் சிராஜ் பந்தை ஸ்கொயர் லெக் திசைக்கு மேல் ஹூக் செய்து பந்தை மைதானத்திற்கு வெளியே அனுப்பினார்.
சிராஜ் ஒரே ஷார்ட் பிட்ச் ஆக வீசி அடி வாங்கியதுதான் மிச்சம், பூர்டெல் அடித்த மைதானத்திற்கு வெளியே சென்ற சிக்ஸ், சிராஜுக்கு வரவிருப்பது குறித்த எச்சரிக்கையாகும். பூர்டெல் 25 பந்தில் 38 ரன்களை விளாச ஆசிப் ஷேக் 97 பந்துகளில் 58 ரன்களுக்கு திறம்பட ஆடினார். கடைசியில் குல்ஷன் ஜா 23, திபேந்திர சிங் ஐரீ 29 ரன்கள் எடுத்து பங்களிப்பு செய்ய சோம்பால் காமி தன் தசைச் சக்தியை காட்டினார். 56 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். நேபாள் வெகு டீசண்டான 230 ரன்களை எடுத்தது.
இந்தியப் பந்து வீச்சில் பெனெட்ரேஷன் என்பார்களே அத்தகைய ஊடுருவல், அச்சுறுத்தல் இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. நேபாள் அணி 230 ரன்கள் அடிக்கின்றது, மிடில் ஓவர்களில் சரியாக ஆடியிருந்தால் 260-0270 எடுப்போம் என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறது என்றால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்தின் அதிரடி வரிசைக்கு எதிராக இந்திய பவுலிங் உலகக்கோப்பையில் என்ன கதியாகப் போகிறதோ என்ற அச்சமே ரசிகரக்ளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த இந்திய அணியில் ஏதோ ஒன்று குறைவாக உள்ளது. அலட்சியமாக ஆடுகின்றனர், தோல்வி பற்றிய கவலையின்மை வெற்றிக்கு வித்திட்டால் நல்லது, ஆனால் தோல்வியே ஒன்றுமில்லை என்ற மன நிலைக்கு வந்து விட்டால் அப்போது பிரச்சனைதான்!
இளம் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரை 0-3 என்று இழந்தது, ஆனால் தென் ஆப்பிரிக்க அணியில் உள்ள புத்துணர்ச்சி, ஸ்பிரிட், வீரர்களின் ஆக்ரோஷம், அவுட் ஆகிச்செல்லும் போது காட்டும் வலி, ஏமாற்ற உணர்வு போன்றவை நிச்சயம் தென் ஆப்பிரிக்கா இந்த மாற்றத்தில் உள்ள காலக்கட்டத்திலிருந்து விரைவில் வெளியே வந்து வலுவான அணியாக பழையபடி மாறும் என்ற நம்பிக்கைப் பிறக்கிறது.
அதே போல்தான் ஆஸ்திரேலியா வீரர்களின் ஸ்பிரிட்டும் உள்ளது, இங்கிலாந்து-நியூசிலாந்து மேட்சிலும் இதே ஸ்பிரிட்டைப் பார்க்க முடிகிறது, ஏன் நேபாளத்திடமே ஸ்பிரிட்டைப் பார்க்க முடிகிறது, ஆனால் இந்திய அணியிடம் ஸ்பிரிட் இருப்பது போல் தெரியவில்லை. ரொம்பவும் கேஷுவலாக இருப்பது போல்தான் தெரிகிறது. இது கூலாக இருந்து பிரஷரைக் கையாளும் விதம் போல் தெரியவில்லை. முடிவு எப்படி இருந்தால் என்ன என்பது போன்ற ஒரு மேட்டிமை மனநிலை போல் தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT