

பியோங்சாங்: ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆடவர் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை இந்திய அணி உறுதி செய்துள்ளது.
ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான அணிகள் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி சுற்றில் இந்தியா - சிங்கப்பூர் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
முதல் ஆட்டத்தில் இந்தியாவின் ஷரத் கமல் 11-1, 10-12, 11-8, 11-13, 14-12 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஐசாக் க்யூக்கை வீழ்த்தினார். அடுத்த ஆட்டத்தில் இந்தியாவின் சத்யன் 11-6, 11-8, 12-10 என்ற நேர் செட்டில் ஒய் கோயன் பாங்கை தோற்கடித்தார். இதனால் இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது. 3-வது ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 61-வது இடம் வகிக்கும் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் 11-9, 11-4, 11-6 என்ற செட் கணக்கில் கிளாரன்ஸ் சி-யை தோற்கடித்தார்.
அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் குறைந்த பட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை இந்திய ஆடவர் அணி உறுதி செய்துள்ளது. அரை இறுதியில் இந்திய ஆடவர் அணி சீன தைபே அல்லது ஈரானுடன் மோதக்கூடும்.
மகளிர் அணி ஏமாற்றம்: மகளிர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 5-வது இடம் வகித்த இந்திய அணி 0-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோல்வி அடைந்தது. உலகத் தரவரிசையில் 8-வது இடம் வகிக்கும் ஜப்பானின் மிமா 1-7, 15-13, 11-8 என்ற நேர் செட்டில் இந்தியாவின் அய்ஹிகா முகர்ஜியை வீழ்த்தினார்.
2-வது ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும் உலகத் தரவரிசையில் 36-வது இடமும் வகிப்பவருமான மணிகா பத்ரா, 7-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஹினா ஹயாதாவிடம் 7-11, 9-11, 11-9, 3-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி 11-7, 4 -11, 6-11, 5-11 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீராங்கனையான மியு ஹிரானோவிடம் வீழ்ந்தார். இந்த தோல்வியால் பதக்க வாய்ப்பை இழந்த இந்திய மகளிர் அணியானது 5 முதல் 8வது இடங்களுக்கான ஆட்டத்தில் மோத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.