Published : 14 Jul 2014 06:50 AM
Last Updated : 14 Jul 2014 06:50 AM

ஜெர்மனி உலக சாம்பியன்- ரூ.3,456 கோடிக்கு பரிசு மழை

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்றது.

ஜெர்மனியின் 22 வயது இளம் வீரர் மரியோ கோட்ஸே 113-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இதன் மூலம் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி மீண்டும் உலக சாம்பியன் ஆனது.

அந்த அணிக்கு ரூ.210 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற அர்ஜென்டீனா அணிக்கு ரூ.150 கோடி கிடைத்தது. 20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் ஜூன் 12-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் 4 அணிகள் என 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.

உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட ஸ்பெயின், போர்ச்சுகல் உள்ளிட்ட சில அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறி அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தன.பிரேசில், ஜெர்மனி, நெதர்லாந்து, அர்ஜென்டீனா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் பிரேசிலை வீழ்த்தி ஜெர்மனியும், நெதர்லாந்தை வென்று அர்ஜென்டீனாவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.

பிரேசில் ரசிகர்களை கால்பந்து மைதானங்களுக்குள்ளும், உலக கால்பந்து ரசிகர்களை டி.வி.க்கு முன்பும் ஒரு மாதமாக கட்டிப் போட்டிருந்த இந்த கால்பந்து திருவிழா ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உச்சகட்டத்தை எட்டியது.

ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி, அர்ஜென்டீனா ஆகிய இரு அணிகள் வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் விளையாடினர். ஆட்ட நேரமான 90 நிமிடங்கள் முடிந்த பின்னும் இரு அணிகளும் கோல் அடிக்காமல் இருந்தது ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சகட்டத்துக்கு அழைத்துச் சென்றது. இறுதியாக இரண்டாவது கூடுதல் நேரத்தில் ஜெர்மனியின் இளம் வீரர் மரியோ கோட்ஸே, 113-வது நிமிடத்தில் வெற்றிக்கான ஒரே கோலை அடித்து தங்கள் அணியை சாம்பியன் ஆக்கினார். இறுதி வரை போராடியபோதிலும் அர்ஜென்டீனா வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் தென் அமெரிக்க மண்ணில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை ஜெர்மனி பெற்றது.

24 ஆண்டு தாகம் தணிந்தது

சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி மீண்டும் உலக சாம்பியனாகியுள்ளது.

இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனா அணியை ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.

அதன் பிறகு 1994, 1998-ம் ஆண்டுகளில் கால் இறுதி ஆட்டம் வரையே ஜெர்மனி முன்னேறியது. 2002-ம் ஆண்டில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினாலும் பிரேசிலிடம் கோப்பையை நழுவவிட்டது. 2006, 2010-ம் ஆண்டுகளில் அரையிறுதியில் தோல்வியடைந்து ஜெர்மனி வெளியேறியது.

இப்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை ஜெர்மனி வென்றுள்ளது.

அடுத்த உலகக் கோப்பை போட்டி 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை இப்போதிருந்தே ரஷ்யா தொடங்கிவிட்டது.

தங்கக் கோப்பை, தங்கப் பந்து, தங்க ஷூ

ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்கத்தில் செய்யப்பட்ட கோப்பையுடன், ரூ.210 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் இதுவே அதிகபட்ச பரிசுத் தொகையாகும். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.180 கோடி பரிசு வழங்கப்பட்டது.

இம்முறை இரண்டாவது இடம் பிடித்த அர்ஜென்டீனா அணிக்கு சுமார் ரூ.150 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 3 வது இடத்தை பிடித்த நெதர்லாந்து அணிக்கு ரூ.120 கோடியும், 4 வது இடத்தை பிடித்த பிரேசில் அணிக்கு ரூ.108 கோடியும் கிடைத்தது.

காலிறுதியில் தோல்வியடைந்த பிரான்ஸ், கொலம்பியா, பெல்ஜியம், கோஸ்டா ரிகா ஆகிய 4 அணிகளுக்கு தலா ரூ.84 கோடியும், நாக் அவுட் சுற்றில் வெளியேறிய சிலி, உருகுவே, மெக்சிகோ, கிரீஸ், நைஜீரியா, அல்ஜீரியா, ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா ஆகிய 8 அணிகளுக்கு தலா ரூ.54 கோடியும் வழங்கப்பட்டன.

முதல் சுற்றிலேயே வெளியேறிய ஸ்பெயின், ஜப்பான், ஈக்வடார், ஹோண்டுராஸ், போஸ்னியா, ஈரான், போர்ச்சுகல், இத்தாலி, இங்கிலாந்து, குரேஷியா, கேமரூன், ஆஸ்திரேலியா, ஐவரி கோஸ்ட், கானா, ரஷ்யா, தென்கொரியா ஆகிய 16 அணிகளுக்கு தலா ரூ.48 கோடி பரிசு வழங்கப்பட்டது. கிளப் அணிகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு உள்பட இந்த உலக கோப்பையின் மொத்த பரிசுத் தொகை ரூ.3,456 கோடி. இது கடந்த உலக கோப்பையைவிட 37 சதவீதம் அதிகம்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருது அர்ஜென்டீனா அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதிக கோல் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் தங்க ஷூ விருதுக்கு கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிகபட்சமாக 6 கோல்கள் அடித்தார்.

சிறந்த கோல் கீப்பருக்கான ‘கோல்டன் கிளவ்’ விருது ஜெர்மனி கோல் கீப்பர் நியாருக்கு வழங்கப்பட்டது.

>உலகக் கோப்பை கால்பந்து 2014 இறுதிப் போட்டியின் விரிவான அலசல்: ஜெர்மனி வீரர்களின் உதிராத உத்வேகமும் அர்ஜென்டீனா பேரழகிகளின் கண்ணீரும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x