

ஒட்டாவா: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் முதல் திருநங்கை என அறியப்படுகிறார் டேனியல் மெக்காஹே (Danielle McGahey). ஐசிசி டி20 மகளிர் உலகக் கோப்பை 2024 தொடருக்கான அமெரிக்க குவாலிபையர் தொடரில் விளையாட கனடா அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.
29 வயதான அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர். கடந்த 2020-ல் அவர் கனடாவில் குடியேறியுள்ளார். 2021-ல் திருநங்கையாக மாறியுள்ளார். அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் அவர் அந்த ஆண்டு மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வீராங்கனை தகுதிக்கான விதிமுறைகளின் படி அவர் மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று விளையாட தகுதி உடையவர் என கடந்த வாரம் ஐசிசி அறிவித்தது. அதையடுத்து அவரை அதிகாரப்பூர்வ சர்வதேச போட்டிக்கான அணியில் சேர்த்தது கனடா.
“சர்வதேச அளவில் திருநங்கையாக விளையாடுவதை கவுரவமாக பார்க்கிறேன். எனது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி என்னால் விளையாட முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை” என டேனியல் தெரிவித்துள்ளார். தனது டெஸ்டோஸ்டிரோன் அளவை தீர்மானிக்க மாதந்தோறும் ரத்த பரிசோதனை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை கனடா அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி உள்ளார். இருந்தாலும் அது சர்வதேச போட்டிகள் அல்ல. பிரேசில், பெரு மற்றும் அர்ஜென்டினா அணிக்கு எதிராக அவர் விளையாடி உள்ளார். இதில் பிரேசில் அணிக்கு எதிராக 46 பந்துகளில் 73 ரன்கள் எடுத்துள்ளார். அதற்கு முன்னர் உள்ளூர் அளவிலான கிரிக்கெட்டில் அவர் விளையாடி வந்துள்ளார்.
அமெரிக்க குவாலிபையர் தொடர் வரும் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 12 போட்டிகள். அர்ஜென்டினா, பிரேசில், கனடா மற்றும் அமெரிக்கா இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்த தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது.