

பெங்களூரு: இருண்ட சுரங்கப்பாதையில் லேசான வெளிச்சம் பார்க்கிறேன் என இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். கடவுளுக்கு நன்றி என சொல்லி சமூக வலைதளத்தில் இதனை அவர் பகிர்ந்துள்ளார்.
25 வயதான ரிஷப் பந்த், கடந்த ஆண்டு டிசம்பரில் டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் காரில் தனியாக பயணித்த போது சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் மீட்டனர். தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசை நார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. மும்பையில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. காயத்தில் இருந்து மீண்டுள்ள அவர், தற்போது ஃபிட்னஸ் சார்ந்து கவனம் செலுத்தி வருகிறார். கடந்த மாதம் அவர் பேட்டிங் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தது. இந்நிலையில், சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
“இருண்ட சுரங்கப்பாதையில் சிறிது வெளிச்சம் காண்கிறேன். கடவுளுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன்” என பந்த் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இதோடு அவர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இடது கை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர் இல்லாமல் எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அவருக்கு மாற்றாக கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் ஆகியோரது பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. நாளைய தினம் (செப்.5) உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ள 15 வீரர்கள் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.