மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ் அதிரடியில் டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி

மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ் அதிரடியில் டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி
Updated on
1 min read

டர்பன்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது.

டர்பனில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் எய்டன் மார்க்ரம் 38 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், தெம்பா பவுமா 17 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்களும் எடுத்தனர். ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 3, ராஸி வான் டெர் டஸ்ஸன் 6, டெவால்ட் ப்ரீவிஸ் 0, பிஜோர்ன் ஃபோர்டுயின் 8, ஜெரால்டு கோட்ஸி 11, லுங்கி நிகிடி 13 ரன்கள் சேர்த்தனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் சீன் அபோட், நேதன் எலிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ஜேசன்பெஹ்ரன்டார்ஃப் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 165 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற் றது.

தொடக்க வீரர்களான மேத்யூ ஷார்ட் 30 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 66 ரன்களும், டிராவிஸ் ஹெட் 18 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். கேப்டன் மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in