Published : 03 Sep 2023 07:32 AM
Last Updated : 03 Sep 2023 07:32 AM

ஆசிய கோப்பை கிரிக்கெட் | இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதியில் ரத்து

பல்லேகலே: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

இலங்கையின் பல்லேகலேவில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. மந்தமாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா 22 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஷாகீன் ஷா அப்ரிடி பந்தில் போல்டானார். தொடர்ந்து விராட் கோலி 4 ரன்னில் ஷாகீன் ஷா அப்ரிடியின் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். படுமந்தமாக விளையாடிய ஷுப்மன் கில் 32 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஹரிஸ் ரவூஃப் பந்தில் போல்டானார்.

ஸ்ரேயஸ் ஐயர் 14 ரன்களில் ஹரிஸ் ரவூஃப் வீசிய ஷாட் பாலை மிட்விக்கெட் திசையில் நின்ற பஹர் ஸமானிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். 66 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் இஷான் கிஷனுடன் இணைந்த ஹர்திக் பாண்டியா பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்து ஆட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தனர். இதனால் இந்திய அணியின் ரன் சீராக ஏற்றம் கண்டது.

அற்புதமாக விளையாடி வந்த இஷான் கிஷன் 81 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்த நிலையில் ஹரிஸ் ரவூஃப் வீசிய பந்தை விளாச முயன்ற போது பாபர் அஸமிடம் கேட்ச் ஆனது. 5-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து இஷான் கிஷன் 138 ரன்கள் சேர்த்தார். சதம்அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை ஷாகீன் ஷா அப்ரிடியிடம் எளிதாக பறிகொடுத்தார்.

இதன் பின்னர் இந்திய அணி ஆட்டம் கண்டது. ரவீந்திர ஜடேஜா 14, ஷர்துல் தாக்குர் 3, குல்தீப் யாதவ் 4, ஜஸ்பிரீத் பும்ரா 16 ரன்களில் நடையை கட்ட 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. உதிரிகள் வழியாக 20 ரன்கள் கிடைக்கப் பெற்றதும் இதில் அடங்கும். இந்திய அணியின் பேட்டிங்கின் போது இரு முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்களையும் நசீம் ஷா, ஹரிஸ் ரவூஃப் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்திய அணியின் பேட்டிங் முடிவடைந்ததும் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இரவு 8.15 மணி அளவில் தொடங்க வேண்டிய ஆட்டம் 9.50 மணி வரை தொடங்கப்படவில்லை. மழை தொடர்ந்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்தி இருந்ததால் 3 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (4-ம் தேதி) நேபாளத்துடன் மோதுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x