Published : 02 Sep 2023 06:14 AM
Last Updated : 02 Sep 2023 06:14 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கார்லோஸ் அல்கரஸ், சபலெங்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ், 2-ம் நிலை வீராங்கனையான பொலாரஸின் அரினா சபலெங்கா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ், 177-ம் நிலை வீரரான தென் ஆப்பிரிக்காவின் லாயிடு ஹாரிஸுடன் மோதினார். 2 மணி நேரம் 28 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல்கரஸ் 6-3, 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-2, 6-2, 6-7 (6-8), 6-2 என்ற செட் கணக்கில் 69-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ'கானலை தோற்கடித்தார். 6-ம் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர் 6-4, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த லோரென்சோ சோனேகோவையும், 8-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-4, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கேல் மோன்பில்ஸையும், 12-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 7-6 (7-1), 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த டேனியல் அல்ட்மேயரையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

கிரேட் பிரிட்டனின் ஆண்டி முர்ரே 3-6, 4-6, 1-6என்ற செட் கணக்கில் 19-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவிடம் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 3 மணி நேரம் 57 நிமிடங்கள் போராடி சகநாட்டைச் சேர்ந்த மைக்கேல்மோவிடம் வீழ்ந்தார். 13-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் 6-1, 6-2, 6-1 என்ற செட்கணக்கில் சீனாவி வூ யிபிங்கையும், 16-ம் நிலை வீரரான கிரேட் பிரிட்டனின் கேமரூன் நோரி 7-5,6-4, 6-4 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சு யு சியூவையும் வீழ்த்தி 3-வது சுற்றில் கால்பதித்தனர்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 96-ம் நிலை வீராங்கனையான கிரேட் பிரிட்டனின் ஜோடி பர்ரேஸை எதிர்த்து விளையாடினார். இதில் சபலெங்கா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் ருமேனியாவின் பாட்ரிசியா டிக்கை தோற்கடித்தார்.

துனிசியாவின் 5-ம் நிலை வீராங்கனையான ஆன்ஸ் ஜபூர் 7-6 (9-7), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் லின்டா நோஸ்கோவாவையும், 9-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் மார்டினா ட்ரெவிசனையும் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தனர்.

13-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் தரியா கஸட்கினா 2-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் சோபியா கெனினையும், 14-ம் நிலை வீராங்கனையான லியுட்மிலா சாம்சோனோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் தமரா கோர்பாட்ச்சையும் தோற்கடித்தனர். 26-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 5-7, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனஸ்தேசியா பாவ்லியு சென்கோவாவை வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.

இந்திய ஜோடி தோல்வி: ஆடவருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடியானது போலந்தின் ஹ்யூகோ நைஸ், ஜான் ஜீலின்ஸ்கி ஜோடியுடன் மோதியது. இதில் யுகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி 3-6, 5-7 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x