Published : 01 Sep 2023 11:19 PM
Last Updated : 01 Sep 2023 11:19 PM

ஆசியக் கோப்பை | பாகிஸ்தானின் 'அட்டாக் பவுலிங்' குறித்த கேள்வி - ரோகித் சர்மா கொடுத்த 'நச்' பதில்

இலங்கை: பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை இந்திய அணி எவ்வாறு சமாளிக்க போகிறது என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் நாளை (செப்.2) நடைபெறவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ஆசியக் கோப்பை 2023 போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக இது உள்ளது. மேலும் இரு அணிகளும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இருதரப்பு தொடரில் விளையாடாமல் ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன என்பதால் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

களத்தில் இரு அணிகளும் மோதும் முன்பாகவே வழக்கம் போல களத்துக்கு வெளியே வார்த்தை மோதல்கள் தொடங்கிவிட்டன. பலரும் இந்திய அணியின் பேட்டிங்குக்கும் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சு தாக்குதலுக்கும் இடையிலான போராக இப்போட்டி இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் என உலகத்தரம் வாய்ந்து வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது பாகிஸ்தான் அணி. எந்த எதிரணியையும் வீழ்த்தும் திறன் கொண்ட இவர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் எவ்வாறு சமாளிக்க போகிறார்கள் என்பது தொடர்பாக இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

போட்டி முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில் இக்கேள்விக்கு ரோகித் சர்மா அளித்த பதிலில், "நசீம் ஷா, ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் போன்றோர் எங்களிடம் இல்லைதான். எங்கள் பவுலர்களை கொண்டே நாங்கள் வலைப்பயிற்சி செய்தோம். ஆனால், எங்களிடம் உள்ள பவுலர்களும் அனைவரும் தரமான பந்துவீச்சாளர்கள். 6 பந்துவீச்சாளர்களும் சிறந்த பந்துவீச்சாளர்கள்தான். அவர்கள் எவ்வளவு சிறந்தவர்கள் என்பதை உலக கிரிக்கெட்டில் நிரூபித்துள்ளனர்.

குறிப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அயர்லாந்து தொடரில் நன்றாகவே அவர் விளையாடினார். பெங்களூரூ முகாமிலும் நன்றாகவே இருந்தார். அதைவிட, அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். அது எங்கள் அணிக்கான ஒரு நல்ல அறிகுறி.

ஷமி மற்றும் சிராஜும் அப்படித்தான். இருவருமே கடந்த சில வருடங்களாக அணிக்காக சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகின்றனர். இதுவும் எங்களுக்கான சாதகமான அறிகுறியாகும். இந்த மூவருமே அடுத்த இரண்டு மாதங்கள் முழுவதும் தங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க முடியும் என்று நம்புகிறேன். இவர்கள் நாளை களத்தில் தங்களின் அனுபவத்தைப் பயன்படுத்தினாலே போதுமானது" என்று தெரிவித்தார்.

அப்போது இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான எதிர்பார்ப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரோகித், "மக்கள் பேசுவதற்கு இரு நாடுகள் இடையேயான பகை, போட்டி என நிறைய உள்ளது. ஆனால், எங்களை பொறுத்தவரை ஒரு அணியாக எங்களுடன் விளையாட ஒரு எதிரணி உள்ளது. அவர்களை வீழ்த்த நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்கவே விரும்புகிறோம். களத்தில் சரியான விஷயங்களைச் செய்வதே எங்களுக்கு உதவும். எனவே அதை செய்ய முற்படுவோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x