

பெங்களூரு: ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடவர் அணியில் சீனியர் வீரரான ஆகாஷ்தீப் சிங் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான கார்த்தி செல்வம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டி வரும் 23ம் தேதி சீனாவில் உள்ள ஹாங்சோவில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகளை ஹாக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. 18 பேர் கொண்ட ஆடவர் அணியில் சீனியர் வீரரான ஆகாஷ்தீப் சிங் மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரரான கார்த்தி செல்வம், ஜுக்ராஜ் சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 3 பேரும் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் விளையாடி இருந்தனர். இவர்களுக்கு பதிலாக ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் சஞ்ஜய், லலித் உபாத்யாய், அபிஷேக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கோல்கீப்பர்களாக பி.ஆர்.ஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதக் தொடர்கின்றனர். 6 டிபன்டர்கள், 5 நடுவரிசை வீரர்கள், 5 முன்கள வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கியில் மொத்தம் 12 அணிகள் கலந்துகொள்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஆசிய விளையாட்டு சாம்பியன் ஜப்பான், பாகிஸ்தான்,வங்கதேசம், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான் அணிகளும் உள்ளன. அதேவேளையில் ‘பி’ பிரிவில் கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 24-ம் தேதி உஸ்பெகிஸ்தானுடன் மோதுகிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய மகளிர் அணிக்கு சவீதா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் ஜெர்மனி, ஸ்பெயினில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளான சுசீலா சானு புக்ரம்பம், பல்ஜீத் கவுர், ஜோதி சாத்ரி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்திய மகளிர் அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் கொரியா, மலேசியா, ஹாங் காங், சிங்கப்பூர் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் ஜப்பான், சீனா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனேஷியா அணிகள் உள்ளன. இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 27ம் தேதி சிங்கப்பூருடன் மோதுகிறது.
இந்திய ஆடவர் அணி: பி.ஆர். ஜேஷ், கிருஷ்ணன் பகதூர் பதக், வருண் குமார், அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்ப்ரீத் சிங் (கேப்டன்), சஞ்சய், சுமித், நீலகண்ட சர்மா, ஹர்திக் சிங் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், ஷம்ஷேர் சிங், அபிஷேக், குர்ஜந்த் சிங், மந்தீப் சிங், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய்.
இந்திய மகளிர் அணி: சவிதா (கேப்டன்), பிச்சு தேவி கரிபம், தீபிகா, லால்ரெம்சியாமி, மோனிகா, நவ்நீத் கவுர், நேஹா, நிஷா, சோனிகா, உதிதா, இஷிகா சவுத்ரி, தீப் கிரேஸ் (துணை கேப்டன்), வந்தனா கட்டாரியா, சங்கீதா குமாரி, வைஷ்ணவி விட்டல் பால்கே, நிக்கி பிரதான், சுசீலா சானு, சலிமா டெட்டே.