Published : 01 Sep 2023 07:30 AM
Last Updated : 01 Sep 2023 07:30 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | ஜோகோவிச், இகா ஸ்வியாடெக் முன்னேற்றம்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு, 7-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று முன்தினம் இரவு ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 6-1, 6-1 என்ற நேர் செட்டில் 76-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பெர்னாப் ஜபாடா மிரல்லஸை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

5-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு, 67-ம் நிலை வீரரான சீனாவின் ஸாங் ஸிஷெனை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸாங் ஸிஷென் 6-4, 5-7, 6-2, 0-6, 6-2 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூடை தோற்கடித்தார். இதன் மூலம் டென்னிஸ் வரலாற்றில் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் முதல் 5 இடங்களுக்குள் உள்ள வீரரை வீழ்த்திய முதல் சீன வீரர் என்ற சாதனையை படைத்தார் ஸாங் ஸிஷென்.

கடந்த முறை அமெரிக்க ஓபனில் 2-வது இடம் பிடித்த காஸ்பர் ரூடு இம்முறை 2-வது சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மற்றொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 4 மணி நேரம் 4 நிமிடங்கள் போராடி 128-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் டொமினிக் ஸ்டிரைக் கரிடம் 5-7, 7-6 (7-2), 7-6 (7-5), 6-7 (6-8), 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

ஆஸ்திரியாவின் டொமினிக் தியம், அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்த்து விளையாடினார். இதில் டொமினிக் தியம் 6-7 (1-7), 0-1 என பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். 9-ம் நிலை
வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெருவின் ஜுவான் பாப்லோ வாரிலாஸையும், 10-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்செஸ் தியாஃபோ 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆஃப்னரையும், 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 3-6, 2-6, 6-2, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் ரோமன் சபியூலினையும் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ஆஸ்திரேலியாவின் தரியா சவிலியை எதிர்கொண்டார். இதில் இகா ஸ்வியா டெக் 6-3, 6-4 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றில் நுழைந்தார். 3 வருடங்களுக்குப் பிறகு களமிறங்கி உள்ள முன்னாள் சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 7-5, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் பெட்ரா விட்டோவாவை வீழ்த்தி 3-வது சுற்றில் கால்பதித்தார்.

6-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃப் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவையும், 20-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஜெலீனா ஒஸ்டபென்கோ 6-3, 5-7, 7-5 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் எலினா அவனேசியனையும், 10-ம் நிலை வீராங்கனையான கரோலினா முச்சோவா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் போலந்தின் மாக்டலேனா ஃப்ரெச்சையும், 15-ம் நிலை வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் லில்லி மியாசாகியையும் தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

4-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் டாம்ஜனோவிச் காயம் காரணமாக விலகினார். இதனால் எலொன ரைபகினா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x