

மும்பை: இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான உரிமத்தை ‘வயாகாம் 18’ நிறுவனம் பெற்றுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊடக நிறுவனமான நெட்ஒர்க் 18 மற்றும் அமெரிக்காவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான வயாகாம் நிறுவனமும் (பாராமவுன்ட் நெட்ஒர்க்ஸ்) இணைந்து வயாகாம் 18 மீடியா பிரைவேட் லிமிடெட் எனும் கூட்டு நிறுவனத்தை உருவாக்கி உள்ளன. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளிலும் டிஜிட்டல் ஊடகங்களிலும் ஒளிபரப்புவதற்கான 5 ஆண்டு கால உரிமத்தைப் பெற்றுள்ளது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் ஜெய் ஷா, வயாகாம் 18 நிறுவனத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊடக உரிமத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பெற்றுள்ள வயாகாம் 18 நிறுவனத்துக்கு வாழ்த்துகள். ஐபிஎல் டி20 மற்றும் பெண்களுக்கான பிரீமியர் லீக் டி20 போட்டிகளால் இந்திய கிரிக்கெட் தொடர்ந்து வளரும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீடியா உரிமையையும் நாங்கள் விரிவுபடுத்தி உள்ளோம். நாம் இணைந்து கிரிக்கெட் ரசிகர்களின் கற்பனையை கைப்பற்றுவோம்" என தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில், "பல ஆண்டுகளாக ஆதரவு அளித்து வந்த ஸ்டார் இண்டியா மற்றும் டிஸ்னி பிளஸ் நிறுவனங்களுக்கு நன்றி. இந்திய கிரிக்கெட், உலகெங்கிலும் உள்ள அதன் ரசிகர்களைச் சென்றடைய நீங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதத்தில் இருந்து 2028 மார்ச் வரை வயாகாம் 18 வசம் உரிமம் இருக்கும். இந்த உரிமத்தை இந்நிறுவனம் ரூ. 67.8 கோடிக்கு, இந்திய கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெற்றுள்ளதாக கிரிக்புஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த உரிமத்தை இதற்கு முன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பல ஆண்டுகளாக வைத்திருந்தது. இந்நிறுவனம் ஹாட்ஸ்ஸ்டார் செயலி மூலம் டிஜிட்டலில் கிரிக்கெட் போட்டிகளை ஒளிரப்பியது.
அதேநேரத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போட்டிகளை அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒளிபரப்புவதற்கான உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தன்னிடம் வைத்துள்ளது. இந்நிறுவனம் ஆசிய கோப்பைப் போட்டிகளை ஹாட்ஸ்ஸடார் செயலியில் இலவசமாக ஒளிபரப்பியது.
5 ஆண்டுகளுக்கான உள்நாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தைப் பெற்றுள்ள வயாகாம் 18 நிறுவனம் மொத்தம் 88 சர்வதேசப் போட்டிகளை ஒளிரப்ப உள்ளது. இதில், 25 டெஸ்ட் போட்டிகள், 27 ஒரு நாள் போட்டிகள், 36 டி20 போட்டிகள் அடங்கும். அடுத்து வர உள்ள ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதும் மூன்று ஒரு நாள் போட்டிகள் வயாகாம் 18-ல் ஒளிபரப்பாக உள்ளது.