

# விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப், கனடாவின் யூஜீனி புச்சார்டு ஆகியோர் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
# இங்கிலாந்தின் டெர்பியில் நடைபெற்று வரும் டெர்பிஷையர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தின் 2-வது நாளில் இந்திய அணி 54.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. சேதேஷ்வர் புஜாரா 80 ரன்களுடனும், கேப்டன் தோனி 46 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர். முன்னதாக டெர்பிஷையர் அணி 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
# இந்திய ஹாக்கி அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, வெளிநாட்டு பயிற்சியாளரால் இந்திய அணிக்கு எந்த நன்மையும் கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
# ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவுள்ள 16 பேர் கொண்ட இந்திய அணிக்கு மிட்பீல்டர் ரீது ராணி கேப்டனாகவும், பின்கள வீராங்கனை தீபிகா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
# கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆனந்த் பவார் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
# தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் தன்னாட்சி அதிகாரத்துக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் அனைத்து சம்மேளனங்களும் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானானந்த சோனோவால் வலியுறுத்தியுள்ளார்.