Published : 30 Aug 2023 03:46 PM
Last Updated : 30 Aug 2023 03:46 PM

“விராட் கோலியின் கேப்டன்சி வெற்றியில் தோனிக்குதான் பெரும் பங்கு” - இஷாந்த் சர்மா பேட்டி

“எம்.எஸ்.தோனி கேப்டன்சி காலக்கட்டத்திலும்தான் இந்திய அணி ‘மாற்றத்தில்’ இருந்தது. ஆனால், தோனி ஒரு முழு அணியை விராட் கோலியிடம் கையளித்தார் என்பதாலேயே கோலி சக்சஸ் கேப்டனாக முடிந்தது” என்று இந்திய வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, தோனிக்குப் புகழாரம் சூட்டும் குழுவில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

மகேந்திர சிங் தோனி ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து ரயில்வே டிக்கெட் கலெக்டராக இருந்து பிறகு கிரிக்கெட்டுக்கு வந்தவர். கடின உழைப்பினால் தேர்ந்த விக்கெட் கீப்பராக இந்திய அணி விக்கெட் கீப்பருக்காக திணறிக்கொண்டிருந்த தருணத்தில் நுழைந்தார். ஆனால் அவர் பலரையும் கவர்ந்தது தன்னுடைய அதிரடி பேட்டிங்கினாலேயே. பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த சதம், இலங்கைக்கு எதிராக எடுத்த 183 அதிரடி ரன்கள் ஆகியவையும் அவரது நீள் முடியும் ஆகிருதியும் உலகில் அவருக்கு பல ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றுத்தந்தது. 2007-ல் இந்திய டி20 அணியின் கேப்டனாகி எடுத்த எடுப்பிலேயே டி20 உலகக்கோப்பையை வென்றார்.

தோனியின் சக்சஸ் பற்றி அனைவரும் பேசும்போது 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஐசிசி 50 ஒவர் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றையே குறிப்பிடுவார்கள். மேலும் சிலர் சிஎஸ்கே 5 முறை பட்டம் வென்றதைக் குறிப்பிடுவர். ஆனால் இவர்களுக்கெல்லாம் தெரியாத ஒரு விஷயம் என்னவெனில் எம்.எஸ்.தோனி இருதரப்பு ஒருநாள் தொடர்களை அதிகம் வென்றுள்ளார் என்பதே.

அதில்தான் அவர் நல்ல ஒருநாள் அணியைக் கட்டமைத்தார். 2015 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது இந்திய அணி. 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி சீரிஸ் என்ற ஒருநாள் முத்தரப்புத் தொடரை தோனி கேப்டன்சியில் இந்திய அணி முதல் முறையாக வென்றது. உலகக்கோப்பையை வென்று விடலாம். ஆனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரை வெல்வது அத்துணை சுலபம் அல்ல. இதையும் சாதித்தார் தோனி.

தோனி டெஸ்ட் அணியை 2008 முதல் 2014 வரை வழிநடத்தினார். ஆனால் ஆஸ்திரேலியாவில் தொடரின் பாதியிலேயே ஓய்வு அறிவித்தது அவரது கரியரில் ஒரு பெரிய பிளாக்மார்க்தான். அப்போது விராட் கோலி கேப்டனாக்கப்பட்டார். ரவி சாஸ்திரி டைரக்ட்ராக சேர்ந்து பிறகு கோச் ஆனார். விராட் கோலி 2017-ல் அனைத்து வடிவ கேப்டனானார்.

இன்றைய டாப் வீரர்கள் பலர் தோனியின் கேப்டன்சியில் உருவானவர்களே என்கிறார் இஷாந்த் சர்மா: “விராட் கோலி கேப்டனான போது இந்திய அணியின் பவுலிங் யூனிட் நிறைவடைந்த ஒன்றாக இருந்தது. மாஹி பாய் (தோனி) கேப்டன்சியில் ஆடும்போது அணி ஒரு கட்டத்தில் மாற்றத்தின் நிலையில் இருந்தது. அப்போது ஷமி, உமேஷ் யாதவ் புதியவர்கள். நான் மட்டும்தான் பழைய ஆள். புவனேஷ்வர் குமாரும் புதியவர்தான். வீரர்களிடம் விஷயங்களைப் புலப்படுத்துவதில் தோனிக்கு நிகர் தோனிதான்.சான்சே இல்ல.பவுலர்களை வளர்த்தெடுத்து கோலியிடன் அப்படியே கொடுத்தார்.

ஷமி, உமேஷ் ஆகியோர் அதன் பிறகு காலப்போக்கில் வித்தியாசமான பவுலர்களாக வெற்றி கண்டனர். ஜஸ்பிரித் பும்ரா வந்தார், ஆகவே ஒரு முழு பேக்கேஜ் ஆக இந்திய அணி மாறியது. ஆனால் கோலியின் தனித்திறமை என்னவெனில் ஒவ்வொருவரின் பவுலிங், பேட்டிங் திறமைச் சுவடுகளை தடம் காண்பதில் வல்லவர். ஒரு வீரரிடத்தில் ஒரு விஷயத்தை மட்டுமேதான் பேசுவார் பிறகு அவரை அதிலேயே விட்டு விடுவார்” என்று இஷாந்த் சர்மா கூறினார்.

தோனி கேப்டன்சியில் இந்திய அணி 60 டெஸ்ட் போட்டிகளில் 27-ல் வென்றது. 2009-ல் இந்திய அணியை நம்பர் 1 டெஸ்ட் நிலைக்குக் கொண்டு சென்றார். ஆனால் விராட் கோலி குருவை மிஞ்சிய சிஷ்யனாக குருவை ஒருவிதத்தில் கடந்து சென்று இந்திய அணியை டெஸ்ட் அரங்கில் ஒரு பெரிய சக்தியாக்கிக் காட்டினார்.

மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்த விராட் கோலி 40 வெற்றிகளை பெற்று இந்தியாவின் ஆகச்சிறந்த கேப்டன் ஆனார். தோனி வளர்த்துக் கொடுத்திருக்கலாம் ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலியின் சமரசமற்ற ஆக்ரோஷம், எதிரணியினரிடத்தில் ஒன்றுக்கு ஒன்று என்னும் விதத்தில் பதிலடி கொடுத்தது, களவியூகம் பந்து வீச்சு மாற்றம் அணியை தன் ஆட்டத்தினால் வழிநடத்தி அணி வீரர்களிடத்தில் தனி ஆளுமையாக விளங்கியது ஆகியவற்றில் தோனியை தூக்கிச் சாப்பிட்டு விட்டார் கோலி என்றுதான் கூற வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x