

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முன்னணி வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் இலங்கை கிரிக்கெட் வாரியம் சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் நேற்று 15 பேர் கொண்ட அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்தா சமீரா, தில்ஷான் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக விலகி உள்ளதால் இவர்களுக்கு பதிலாக பினுரா பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் வனிந்து ஹசரங்கா இடத்தை நிரப்பும் வகையில் ஆல்ரவுண்டர் துஷான் ஹேமந்தா அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். கேப்டனாக தசன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனியர் வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேவேளையில் கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவிஷ்கா பெர்னாண்டோவும் சேர்க்கப்படவில்லை. ஆசிய கோப்பை தொடரில் இலங்கை தனது முதல் ஆட்டத்தில் நாளை (31-ம் தேதி) வங்கதேசத்துடன் மோதுகிறது.
அணி விவரம்: தசன் ஷனகா (கேப்டன்), பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, குஷால்ஜனித் பெரேரா, குஷால் மெண்டிஸ், ஷாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, மகேஷ் தீக் ஷனா, துனித் வெல்லலகே, மதீஷா பதிரனா, கசன் ரஜிதா, துஷான் ஹேமந்தா, பினுரா பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.