Last Updated : 09 Apr, 2014 09:09 AM

 

Published : 09 Apr 2014 09:09 AM
Last Updated : 09 Apr 2014 09:09 AM

விளையாட்டில் இனியும் வேண்டாம் தாக்குதல்

விளையாட்டில் வெற்றியோ, தோல்வியோ இரண்டையுமே சமமாக பார்க்க வேண்டும், பாவிக்க வேண்டும். வெற்றியும், தோல்வியும் விளையாட்டின் ஓர் அங்கம். ஒருவர் தொடர்ந்து வெற்றி பெறவோ, தொடர்ந்து தோல்வியடையவோ முடியாது. இரண்டுமே மாறிமாறித்தான் வந்து கொண்டிருக்கும். இதைக்கூட சகித்துக் கொள்ளாமல் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஏற்ற இறக்கம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் வந்து செல்லக்கூடிய விஷயம் தான். ஆனால் அதற்காக ஒருவரின் உணர்வுகளையும், உடமைகளையும் பாதிக்கக்கூடிய வகையில் ரசிகர்கள் நடத்திய தாக்குதலை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

யுவராஜின் பங்கு

இவர்களை தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் என்று சொல்வதைவிட தீவிரவாதிகள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்குமோ என தோன்றுகிறது. ஏனெனில் தீவிரவாதியும் தாக்குதல்தான் நடத்துகிறான். இந்த ரசிகர்களும் தாக்குதலைத்தான் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் நோக்கங்கள்தான் வேறேயொழிய, தங்கள் கோபத்தை வெளிப்படுத்த தேர்ந் தெடுத்திருக்கும் பாதைகள் ஒரே மாதிரியானவைதான்.

இருவருமே காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்கிறார்கள். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு யுவராஜ் சிங்தான் காரணம் என்று கூறி தாக்குதல் நடத்தும் வெறியர்கள், 2007 டி20 உலகக் கோப்பை போட்டியிலும், 2011 உலகக் கோப்பை போட்டியிலும் இந்தியா கோப்பையை வென்றதில் முக்கியப் பங்கு வகித்தது இதே யுவராஜ் சிங்தான் என்பதை ஒரு கணமாவது சிந்தித்தார்களா?

தோல்விக்கு பல காரணங்கள்

ஓர் அணியின் தோல்விக்கு ஒட்டுமொத்தமாக ஒரு வீரரை மட்டும் குறை சொல்வது எந்த வகையில் நியாயம்? யுவராஜ் சிங் 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்ததுதான் தோல்விக்கு காரணம் என்று விமர்சிக்கிறார்கள்.

அப்படியானால் விராட் கோலியும் ஆரம்பத்தில் நிதானத் தைத்தான் கடைபிடித்தார். 30 பந்துகள் வரையில் சந்தித்தபிறகு தான் அதிரடியில் இறங்கினார். கடைசியாக களமிறங்கிய கேப்டன் தோனியும், 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டும்தான் எடுத்தார். அதேநேரத்தில் இலங்கையின் சங்ககாரா சிறப்பாக ஆடினார். இந்தியாவின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் முதலில் பேட் செய்த இந்திய அணியால் ரன் குவிக்க முடியவில்லை என இந்தியாவின் தோல்விக்கு பல காரணங்கள் இருக்கையில் யுவராஜை மட்டும் விமர்சிப்பதையும், அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஒரு போட்டியில் சொதப்பி னார் என்பதற்காக அவரை பதம் பார்த்திருக்கிறோம், காயப்படுத் தியிருக்கிறோம், வேதனைக் குள்ளாக்கியிருக்கிறோம்.

ஆழமான பாதிப்பு

டி20 உலகக்கோப்பையில் ஏற்பட்ட தோல்வியின்பிடியில் இருந்து யுவராஜ் சிங் மீள்வதற்குள் ளாகவே, அவர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருப்பது அவருக்குள் எவ்வளவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்? இனி ரசிகர்கள் பாசத்தோடும், பரிவுடனும் அவரை அணுகினாலும் அவரால் இயல்பாக ரசிகர்களிடம் பழக முடியுமா?

சச்சின் டெண்டுல்கர் 100-வது சதமடித்த பிறகு பேசுகையில், “ஊடகங்கள் எனது 100-வது சதத்தைப் பற்றியே பேசின. ஆனால் நான் ஏற்கெனவே 99 சதங்கள் அடித்ததை மறந்துவிட்டன” என வருத்தத்தோடு தெரிவித்தார்.

100-வது சதம் விஷயத்தில் ஊடகங்களின் கேள்வியே மிக சாதுவான, பக்குவமான மனிதரான சச்சினை இந்த அளவுக்கு பாதித்தது. அப்படியானால் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவரான யுவராஜ் சிங்கின் மீதான தாக்குதல் அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கும். எப்போதுமே களத்துக்கு வெளியில் இருந்து குறைகூறுவதும், விமர்சிப்பதும் எளிது.

நாட்டுப்பற்று

ஆனால் களத்தில் நின்று ஆடுவது அவ்வளவு எளிதல்ல. ஒவ்வொரு வீரருக்கும் எந்த அளவுக்கு நெருக்கடியிருக்கும் என்பதை ரசிகர்கள் உணர வேண்டும். எந்த வீரருமே வேண்டு மென்று சொதப்புவதில்லை. நம்மைப் போலவே நம்முடைய வீரர்களுக்கும் நாட்டுப்பற்று இருக் கிறது என்பதை ரசிகர்கள் முதலில் உணர வேண்டும். இன்றைக்கு நாம் விமர்சிக்கின்ற யுவராஜ் சிங்தான், 2007-ல் டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு நம்மை குஷிப்படுத்தினார். அந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு அவரும் ஒரு காரணம். 2011 உலகக் கோப்பையில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் அற்புதமாக ஆடி, இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார்.

யுவராஜ் தந்த நம்பிக்கை

எத்தனையோ போட்டிகளில் சச்சின், கங்குலி போன்றோர் ஆட்டமிழந்தாலும்கூட, யுவராஜ் சிங் இருக்கிறார், அதனால் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையோடு தொலைக்காட்சி முன்பு ரசிகர்களாகிய நாம் காத்திருந்த நாட்கள் அதிகம். அதில் பெரும்பாலான நாட்களில் நம்முடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தவர் இந்த யுவராஜ் சிங். 2002-ல் நடைபெற்ற நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியே அதற்கு நல்ல உதாரணம்.

சுமார் 15 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடி பல்வேறு முக்கிய போட்டிகளில் வெற்றி தேடித்தந்த மகத்தான வீரரான யுவராஜ் சிங்கை ஒரு தோல்விக்காக ஆறாத துயரில் ஆழ்த்தியிருக்கிறோம். கிரிக்கெட்டை பொறுத்தவரை யில் ஆசிய கண்டத்தில்தான் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகம். மற்ற நாடுகளில் ஓர் அணி தோற்றால் அந்நாட்டைச் சேர்ந்த ஊடகங்களும், முன்னாள் வீரர்களும் விமர்சிப்பதுதான் இன்றளவும் வழக்கமாக உள்ளது.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வீரர்களின் மீதும், அவர்களின் உடைமைகளின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது இன்றளவும் தொடர்கிறது. இனியாவது இந்த கிரிக்கெட் வெறியர்கள் (ரசிகர்கள்) தங்களின் வெறித்தனமான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வீரர் நன்றாக ஆடும்போது அவரை ஹீரோவாகப் பார்க்கும் நாம், அவர்கள் சரியாக ஆடாதபோது அவர்களை விரோதிகளாகவும், வில்லன்களாகவும் நினைத்து தாக்குதல் தொடுப்பது சரியான அணுகுமுறையல்ல. விளை யாட்டை விளையாட்டாகவே பார்க்க வேண்டும். இதுபோன்ற தாக்கு தல்கள் இனியும் தொடர்வது விளையாட்டுக்கு நல்லதல்ல.

பீனிக்ஸ் பறவை

யுவராஜ் சிங் உயிர்கொல்லி நோயான புற்றுநோயின் பிடியில் சிக்கியபோது அவர் கிரிக்கெட்டுக்கு திரும்பமாட்டார் என்று இந்த உலகமே எதிர்பார்த்தது. ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் தகர்த்து பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்து கிரிக்கெட்டுக்கு திரும்பினார். எனவே டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் ஒன்றை வைத்து மட்டும் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக விமர்சிப்பதையோ, நினைப்பதையோ ரசிகர்கள் மட்டுமல்ல, முன்னாள் வீரர்களும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அபார மன உறுதி படைத்தவரான யுவராஜ் சிங், புற்றுநோயை வென்றது போலவே டி20 உலகக் கோப்பை தோல்வியையும் தாண்டி வலுவான வீரராக மீண்டும் களம் திரும்புவார் என நம்புவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x