Published : 04 Dec 2017 01:09 PM
Last Updated : 04 Dec 2017 01:09 PM

105 ரன்களுக்கு 8 விக். இழந்து மீண்டும் சரிவு: மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் தோல்வி

வெலிங்டன் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று 214/2 என்று தொடங்கிய மே.இ.தீவுகள் மீண்டும் சரிவு கண்டு 8 விக்கெட்டுகளை அடுத்த 105 ரன்களுக்குப் பறிகொடுத்து 319 ரன்களுக்குச் சுருண்டது, இதனையடுத்து நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

பிராத்வெய்ட் 79 ரன்களுடனும் ஷேய் ஹோப் 21 ரன்களுடனும் இன்று தொடங்கினர். ஆனால் புதிய பந்தில் 20 ஓவர்களில் கடைசி 7 விக்கெட்டுகளை 62 ரன்களுக்கு இழந்து படுமோசமான தோல்வியைத் தழுவினர்.

3-ம் நாள் எடுத்த 2 விக்கெட்டுகளுடன் மேட் ஹென்றி இன்று ராஸ்டன் சேஸ் விக்கெட்டை வீழ்த்தி 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிராண்ட்ஹோம், போல்ட், வாக்னர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற சாண்ட்னர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் ஷார்ட் பிட்ச் பவுன்சர்களை வீசிய நீல் வாக்னரின் 2-வது இன்னிங்ஸ் சாத்துமுறையாக அமைந்தது, அவர் 22 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் 102 ரன்களுகு இன்று 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மே.இ.தீவுகள் அணியில் தொடக்க வீரர் பிராத்வெய்ட் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 91 ரன்கள் எடுத்து அருமையாக ஆடி வந்த நிலையில் சாண்ட்னர் பந்திற்கு பின்னால் சென்று பின்னங்காலில் வாங்கினார் பிராத்வெய்ட், எல்.பி.ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு 86-வது ஓவர் முதல் தொடங்கியது சரிவு, ஷேய் ஹோப், போல்ட்டின் எகிறு பந்து எட்ஜில் பட்டு கேட்ச் ஆனது. டிரெண்ட் போல்ட்டை தொடர் பவுண்டரிகள் அடித்த ராஸ்டன் சேஸ் (18) அதிக நேரம் நீடிக்கவில்லை. தேவையில்லானல் வைடாகச் சென்ற ஹென்றியின் பந்தை ஆடி வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டார்.

உணவு இடைவேளையின் போது மே.இ.தீவுகள் கையில் 5 விக்கெட்டுகள் இருந்தன, ஆனால் அதன் பிறகு ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை மே.இ.தீவுகள் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அறிமுக வீரர் சுனில் அம்ப்ரிஸ், கிராண்ட் ஹோம் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார். ஷேன் டவ்ரிச் வாக்னர் பந்தை நேராக பாயிண்ட் பீல்டர் கையில் கொடுத்தார். கிமார் ரோச், ஜேசன் ஹோல்டர், மிகுவெல் கமின்ஸ் அனைவரும் 5 ஓவர்களில் ஆட்டமிழந்தனர்.

மே.இ.தீவுகள் மீண்டுமொரு முறை பேட்டிங் சாதக சூழ்நிலைகளில் சரிவு கண்டுள்ளது. இன்று கூட புதிய பந்து எழும்பியதே தவிர பெரிய அளவில் ஸ்விங் இல்லை. 214/2 என்று தொடங்கி 319 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி கண்டது மே.இ.தீவுகள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x