Published : 04 Dec 2017 05:45 PM
Last Updated : 04 Dec 2017 05:45 PM

இங்கிலாந்து 227 ரன்களுக்குச் சுருண்ட பிறகு ஆண்டர்சன் அற்புதம்: ஆஸ்திரேலியா 268 ரன்கள் முன்னிலை

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்குச் சுருண்டு ஆஸ்திரேலியாவுக்கு 215 ரன்கள் முன்னிலையைக் கொடுத்தாலும் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.

காரணம் நவீன கேப்டன்களின் பாலோ ஆன் மறுப்புக் கோட்பாடுதான்.

இதனையடுத்து 53/4 என்று சரிவு கண்ட ஆஸ்திரேலியா 268 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 330-340 ரன்கள் வெற்றி இலக்கென்றால் இங்கிலாந்து நிச்சயம் முயன்று வெற்றி பெற வாய்ப்பு உருவாகியுள்ளது, ஆனாலும் மிகமிகக் கடினம்.

ஆட்ட முடிவில் நேதன் லயன் 3 ரன்களுடனும் ஹேண்ட்ஸ்கம்ப் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தின் இந்த 40% சாதக நிலைக்கு ஜேம்ஸ் ஆண்டர்சனின் அதி அற்புத ஸ்விங் பவுலிங்கே காரணம், அவர் 11 ஓவர்கள் வீசி 7 மெய்டன்களுடன் 16 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ் 7 ஓவர்களில் 13 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸி.கொடுத்த நெருக்கடியில் 227 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து:

இன்று காலை 29/1 என்று தொடங்கிய இங்கிலாந்து குளிர்பான இடைவேளையின் போது 76/3 என்றும் பிறகு தேநீர் இடைவேளையில் (தேநீர் இடைவேளை பகலிரவு போட்டியில் டின்னருக்கு முன்பாக வரும்) 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் என்றும் சரிந்தது. மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ நன்றாகத் தொடங்கியும் இருவரும் முறையே 25 மற்றும் 21 என்ற சொந்த எண்ணிக்கையில் வெளியேற இங்கிலாந்து 142/7 என்று ஆனது. ஆனால் அதன் பிறகு கிறிஸ் வோக்ஸ் (36), ஓவர்டன் (41) இணைந்து 66 ரன்களைச் சேர்த்தனர். அப்படியும் பாலோ ஆன் தவிர்ப்பு எண்ணிக்கையை எட்ட முடியாமல் 227 ரன்களுக்குச் சுருண்டது.

பிராட் மற்றும் ஆண்டர்சனை வீழ்த்திய நேதன் லயன் 2017-ம் ஆண்டில் இப்போதைக்கு அதிக டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றியவரானார். ஆஸ்திரேலியா தரப்பில் நேதன் லயன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, கமின்ஸ் 2 விக்கெட்டுகளையும் ஹேசில்வுட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இன்று காலை ஜேம்ஸ் வின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் பந்தை பின் காலில் சென்று அடிக்க முனைந்தார் எட்ஜ் செய்து வெளியேறினார். ஜோ ரூட் கொஞ்சம் பாசிட்டிவாக ஆடுவோமே என்று முயற்சி செய்தார், ஆனால் பயனளிக்காமல் 9 ரன்களில் பாட் கமின்ஸ் புல் லெந்த் பந்தை டிரைவ் ஆடி 3-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார். அலிஸ்டர் குக் 37 ரன்களில் நேதன் லயன் ஆஃப் பிரேக்கை தேவையில்லாமல் ஆடப்போய் ஸ்மித்திடம் கேட்ச் வழங்கினார். டேவிட் மலான் 19 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கமின்ஸின் பந்து ஒன்று எழும்பி உள்நோக்கி கட் ஆனது, மட்டையின் உள்விளிம்பில் பட்டு பெய்னிடம் கேட்ச் ஆனது.

தேநீர் இடைவேளையின் போது 128/5 என்று இருந்த இங்கிலாந்து அணி அதன் பிறகு சுதாரிக்க முயன்றது. தேநீர் இடைவேளைக்கும் இரவு உணவுக்கும் இடையிலான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் காட் அண்ட் பவுல்டு முறையில் விழுந்தன. மொயின் அலி 25 ரன்களில் லயன் பந்தை டிரைவ் ஆடினார், அது லயனுக்கு இடது புறம் காற்றில் வந்தது, ஒரு முழு நீள டைவ் அடித்தார், பிடித்தார்.

அடுத்ததாக மிட்செல் ஸ்டார்க் பந்தை நன்றாகவே அடித்தார் ஜானி பேர்ஸ்டோ (21), ஸ்டார்க் அதனை கொஞ்சம் சிரமப்பட்டாலும் பிடித்து விட்டார். கிறிஸ் வோக்ஸ் போராடி விளையாடிய 36 ரன்கள் இன்னிங்சை சரியாக ஆடாத புல் ஷாட் மூலம் அருகிலேயே கொடியேற்ற அதனை ஸ்டார்க்கே பிடித்தார். இப்படியாக 227 ரன்களுக்கு இங்கிலாந்து சுருண்டது. அறிமுக பவுலர் ஓவர்டன் 79 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து ஆஸ்திரேலியாவின் கடும் ஸ்லெட்ஜிங்கையும் மீறி தன் உறுதியை அறிவித்தார்.

ஜேம்ஸ் ஆண்டர்சனின் அற்புத வீச்சு:

215 ரன்கள் முன்னிலையில் அதி தன்னம்பிக்கையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்க் ஸ்விங் பந்து வீச்சின் வீச்சை காட்டினார் ஆண்டர்சன். கேமரூன் பேங்க்ராப்டிற்கு அவுட் ஸ்விங்கர் ஒன்றை ஆசைகாட்டி மோசம் செய்தார், எட்ஜ் ஆனது கேட்ச் அவுட். உஸ்மான் கவாஜா சிலபல நெருக்கடியான தருணங்களுக்குப் பிறகு 20 ரன்களில் ஆண்டர்சன் பந்து ஒன்று அவரது நிலையையே திருப்ப கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். டேவிட் வார்னரால் கூட இங்கிலாந்து பந்து வீச்சை ஒன்றும் செய்ய முடியவில்லை 60 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்தார், ஆண்டர்சன் இவருக்குச் சில கவலைதரும் தருணங்களை அளித்தார்.

வார்னர் கடைசியில் 14 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

மேலும் ஸ்மித்துக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசி பந்தின் கோணத்தையும் ஸ்விங்கையும் எதிரெதிர் திசையில் வைத்து படாதபாடு படுத்தினார், ஒரு பந்து ஆஃப் அண்ட் மிடிலில் பிட்ச் ஆகி சற்றே உள்ளே வர ஸ்மித் ‘பிளம்பாக’ வாங்கினார், கள நடுவர் கொடுத்த அவுட் தீர்ப்பை ஸ்மித் ரிவியூ செய்து திருப்பினார். முதல் இன்னிங்ஸில் ஷான் மார்ஷ், கமின்ஸ் ஆகியோருக்கு எல்.பி.கேட்டு, ரிவியூ கேட்டுக் கேட்டு நாட் அவுட்டாகி அலுத்துப் போனார் ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த இன்னிங்ஸிலும் 3-ம் நடுவரின் முரண்பாடுகள் வெட்ட வெளிச்சமாகியது.

6 ரன்கள் எடுத்த ஸ்மித், கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்.பி தீர்ப்பளிக்கப்பட்டார் மீண்டும் ரிவியூ, இம்முறை பலனளிக்கவில்லை வெளியேறினார். ஆஃப் ஸ்டம்பில் பந்து லேசாக உள்ளே வந்து நேரானது, அருமையான பந்து பேக்ஃபுட்டைத் தவிர வேறு எதுவும் செய்யமாட்டேன் பராபரமே என்று ஆடியதால் பின் கால்காப்பு மேல் பகுதியில் வாங்கினார், இந்த முறை தப்பமுடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x