Published : 12 Jul 2014 04:00 PM
Last Updated : 12 Jul 2014 04:00 PM

அதிவிரைவில் 5 ஒருநாள் சதம்: தென் ஆப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக் சாதனை

இலங்கையில் நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் கடைசி ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சதம் கண்ட தென் ஆப்பிரிக்க துவக்க வீரர் குவிண்டன் டி காக் இளம் வயதில் 5 ஒருநாள் சதங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்

ஹம்பண்டோட்டாவில் தற்போது நடைபெற்று வரும் இந்தக் கடைசி ஒருநாள் போட்டியில் குவிண்டன் டி காக் 127 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 128 ரன்கள் விளாசினார்.

இது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவரது 5வது சதமாகும். இன்னும் 1000 ரன்களையே கடக்காத இவர் 21 வயது 207 நாட்கள் நிரம்பிய நிலையில் 5வது ஒருநாள் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

வயது மட்டுமல்ல 19 ஒரு நாள் போட்டிகளில் இவர் 5 ஒருநாள் சதங்கள் எடுத்து குறைந்த போட்டிகளில் 5 சதங்கள் எடுத்தவர் என்ற வகையிலும் சாதனை செய்துள்ளார்.

இதற்கு முன்னர் இலங்கையின் உபுல் தரங்கா இந்தச் சாதனையை வைத்திருந்தார். அவர் வயது 21 ஆண்டுகள், 247 நாட்கள் ஆகியிருந்த போது 5வது சதம் எடுத்தார். இப்போது இவரது சாதனையை முறியடித்தார். டி காக். உபுல் தரங்கா 28 போட்டிகளில் 5 சதங்கள் எடுத்தார்.

உபுல் தரங்காவுக்குப் பிறகு இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் 28 ஒருநாள் போட்டிகளில் 5 சதங்கள் எடுத்த வீரர் ஆவார். ஹஷிம் ஆம்லா 30 ஒருநாள் போட்டிகளில் 5 ஒருநாள் சதங்கள் எடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x