தாயுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா இருக்கும் படம் வைரல்

தாயுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா இருக்கும் படம் வைரல்
Updated on
1 min read

தனது தாய் நாகலட்சுமியுடன் இந்திய செஸ் வீரர் ஆர். பிரக்ஞானந்தா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுவரை அந்தப் படத்தை 39 லட்சம் பார்த்துள்ளனர்.

அஜர்பைஜான் தலைநகர் பாகு நகரில் கடந்த வாரம் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்செனிடம் தோல்வி கண்டார்.

இந்நிலையில், செஸ் விளையாட்டை புகைப்படங்களாக எடுத்து வெளியிட்டு புகழ்பெற்ற பிரபல புகைப்படக் கலைஞர் மரியா எமேலியநோவா, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அவரது தாயாருடன் இணைந்து ஒரு செல்பி எடுத்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்தார். அதில் அவர் "லெஜண்ட் மற்றும் அவரது மகனுடன் செல்பி எடுத்துக்கொண்டேன்" என்று பட விளக்கமும் வெளியிட்டிருந்தார்.

சென்னையை சேர்ந்த 18 வயதான பிரக்ஞானந்தா தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகன் விளையாடும் அனைத்து இடங்களுக்கும் அவரது தாயார் நாகலட்சுமியும் சென்று விளையாட்டில் அவர் நிலை உயர உறுதுணையாக நிற்கிறார்.

இன்று பிரக்ஞானந்தா எட்டியிருக்கும் உயரத்துக்கு, அவரது தாய் தான் மிகமுக்கியக் காரணம். செஸ் விளையாட்டில் பிரபலமான வீரராக பிரக்ஞானந்தா இருந்தபோதும் அவரது தாயை லெஜண்ட் என்று மரியா எமேலியநோவா பாராட்டி புகழாரம் சூட்டியுள்ளார். பிரக்ஞானந்தாவின் வெற்றிக்கு பின் இருக்கும் தாயின் நெகிழ்ச்சி போராட்டத்தையும் உலகம் அறிந்துகொள்வதற்காகவே, அவரை லெஜண்ட் என்று பாராட்டியுள்ளார் மரியா.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுவரை அந்தப் புகைப்படத்தை 39 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் ஏராளமானோர் அதை பகிர்ந்தும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in