

புதுடெல்லி: செஸ் விளையாட்டின் பொற்காலத்தில் இந்தியா நுழைந்துள்ளது என்று அகில இந்திய செஸ் சம்மேளனத்தின் (ஏஐசிஎஃப்) தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு சஞ்சய் கபூர் அளித்த பேட்டி. அண்மையில் நிறைவுற்ற உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அபாரமாக விளையாடினார் நமது இந்திய வீரர் பிரக்ஞானந்தா. கடந்த 30 ஆண்டுகளாக செஸ் விளையாட்டில் நமது கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அவர்தான் இந்திய செஸ் விளையாட்டின் முகமாக இருந்தார்.
தற்போது பிரக்ஞானந்தா, டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி போன்ற திறமையான வீரர்கள் வந்துள்ளனர். இதன்மூலம் அவர்கள் தாயகத்தின் பெருமையை உலகறியச் செய்துள்ளனர். இந்தியா தற்போது செஸ் விளையாட்டின் பொற்காலத்தில் நுழைந்துள்ளது என்று கூறலாம். அடுத்த 2 ஆண்டுகளில் நமது நாட்டிலிருந்து நூற்றுக்கும் அதிகமான கிராண்ட்மாஸ்டர்கள் உருவாவார்கள்.
இந்தியாவின் 83-வது கிராண்ட்மாஸ்டராக ஆதித்யா சமந்த் கடந்த ஜூலை மாதம் உருவானார். தற்போது செஸ் விளையாட்டில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் உருவாகி வருகின்றனர். நடந்து முடிந்த உலகக் கோப்பை செஸ் போட்டியில் தரவரிசையில் 2-வது இடத்திலுள்ள ஹிகாரு நகாமுரா, 3-வது இடத்திலுள்ள ஃபேபியானா கருனா ஆகியோரை வீழ்த்தியிருந்தார் பிரக்ஞானந்தா. அவர் விளையாடிய விதம் அற்புதமானது.
இந்தியாவின் சதுரங்கப் புள்ளியாக தமிழ்நாடு உள்ளது. அதேநேரத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் திறமையான வீரர்கள் வரத் தொடங்கியுள்ளனர். நான் ஜம்மு-காஷ்மீரில் இருந்து வடகிழக்கு பகுதிகளுக்கு செஸ் விளையாட்டை எடுத்து செல்ல விரும்புகிறேன்.
கொல்கத்தாவில் தற்போது ஆசிய விளையாட்டுக்கான பயிற்சி முகாமை நடத்தி வருகிறோம். நாட்டில் செஸ் விளையாட்டை வளர்த்து, அது பாடத்திட்டத்தில் கற்பிக்கப்படுவதைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை நாங்கள் செய்து வருகிறோம். செஸ் விளையாட்டுக்கான பாடத்திட்டம் இப்போது கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. விரைவில் பள்ளிப் பாடத்திட்டங்களில் செஸ் விளையாட்டு இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.