உலக தடகள சாம்பியன்ஷிப் | எத்தியோப்பிய வீராங்கனைக்கு தங்கம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மாரத்தான் ஓட்டத்தில் (42 கி.மீ) எத்தியோப்பிய நாட்டு வீராங்கனை அமேன் பெரிசோ ஷங்குலே முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மகளிர் பிரிவில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. இதில் எத்தியோப்பிய நாட்டு வீராங்கனை அமேன் பெரிசோ ஷங்குலே 2 மணி நேரம் 24 நிமிடங்கள் 23 விநாடிகளில் ஓடிவந்து முதலிடம் பிடித்து தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
உலக தடகளப் போட்டியின் மாரத்தான் பிரிவில் நடப்புச் சாம்பியனும், எத்தியோப்பிய வீராங்கனையுமான கோட்டிடோம் கெப்ரெஸ்லாஸ் 2-வது இடம் பிடித்தார். அவர் 2 மணி நேரம் 24 நிமிடங்கள் 34 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார். வெறும் 11 விநாடிகளில் அவர் முதலிடத்தை இழந்தார்.
3-வது இடத்தை பிடித்த மொராக்கோ வீராங்கனை ஃபாத்திரமா எசாரா கர்தாடி (2 மணி நேரம் 25 நிமிடங்கள் 17 விநாடிகள்) வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இஸ்ரேல் வீராங்கனை லோனா செம்தாய் சால்பீட்டர் 4-வது இடத்தையும், எத்தியோப்பிய வீராங்னை யாலெம்ஜெர்ப் யெஹு அலாவ் 5-வது இடத்தையும் பெற்றனர்.
