

தோனி என்னதான் வெற்றிகளைக் குவித்தாலும் அவரது டெஸ்ட் போட்டி கள உத்திகள் தொடர்ந்து கிரிக்கெட் நிபுணர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தப் பட்டியலில் சுனில் கவாஸ்கர் தற்போது இணைந்துள்ளார். குக்கிற்கு ஜடேஜா கேட்சை விட்டது. தோனியின் தவறாகவே மிகச்சரியாகப் பார்க்கப்பட்டுள்ளது.
தனியார் சானல் ஒன்றில் முதல் நாள் ஆட்டம் பற்றி கருத்துக் கூறிய சுனில் கவாஸ்கர் தோனியின் ஸ்லிப் ஃபீல்டிங் உத்தியை விமர்சனத்துக்குட்படுத்தினார்.
"முரளி விஜய், விராட் கோலி ஏன் ஸ்லிப்பில் இல்லை? அவர்கள்தான் இந்திய அணியில் இப்போதைக்கு சிறந்த ஸ்லிப் ஃபீல்டர்கள், ஆனால் அவர்கள் அங்கு இல்லை. ஏன் என்று தெரியவில்லை. ஆனால் இந்த முடிவு அணிக்கு எந்தவித உதவியையும் புரியவில்லை.
மேலும் ஸ்லிப்பில் ஃபீல்டர்கள் நிறுத்தப்படும் முறையும் தவறாகவே தெரிகிறது. முதல் ஸ்லிப் தோனியிடமிருந்து விலகி நிற்க மற்ற ஸ்லிப் ஃபீல்டர்க்ள் கூட்டமாக அருகருகே நிற்கின்றனர். இதனால் கேட்ச் வந்தால் அதைப் பிடிக்கப்போவது யார் என்ற சந்தேகம் அவர்களுக்குள்ளேயே ஏற்படுவதுதான் நிகழும். இந்த விவகாரங்களை முதலில் சரி செய்ய வேண்டும்.
ஜடேஜா ஒரு சிறந்த ஃபீல்டர் என்பதில் ஐயமில்லை. அவர் ஸ்லிப்பில் இல்லாமல் வெளியில் நின்றிருந்தால் நிச்சயம் ரன்களை அவர் தடுத்திருப்பார். ஸ்லிப்பில் அவர் கேட்ச் பிடிப்பார் என்பது ஒரு புறம் இருந்தாலும் அவரை சிறப்பாகப் பயன்படுத்த வேண்டுமெனில் கவர் திசையில் நிறுத்துவதே சிறந்தது” என்றார் சுனில் கவாஸ்கர்.
முதல் நாள் ஆட்டத்தில் ரஹானே, தவான், ஜடேஜா ஆகியோர் பெரும்பகுதிட்யான ஆட்டத்தில் ஸ்லிப் திசையில் நின்றிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது,