

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் மாநிலம் முழுவதும் இருந்து 72 பள்ளிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
நேற்று திருப்பூரில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டி.இ.ஏ - சரணாலயா அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த டிஇஏ அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது.
எல்.கோபிசந்த் 76 பந்துகளில், 32 பவுண்டரிகளுடன் 169 ரன்கள் விளாசினார். எஸ்.சஷ்டிவேல் 38 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்தார். 287 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சரணாலயா அணி 13 ஓவர்களில் 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. யுவராஜ் சிங் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் குண்டடம் அரசு பள்ளி அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் எம்.என்.சிக்கண்ண செட்டியார் அணியை வீழ்த்தியது.
திருச்சியில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பிருந்தாவன் வித்யாலயா அணியை 176 ரன்கள் வித்தியாசத்தில் ஆல்பா குரூப் அணி வென்றது. முதலில் பேட் செய்த ஆல்பா குரூப் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. ஆறுமுக விக்னேஷ் 58, சுஜன் மகாராஜ் 28 ரன்கள் சேர்த்தனர். 211 ரன்கள் இலக்குடன் விளையாடிய பிருந்தாவன் வித்யாலயா அணி 34 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீரங்கம் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் மகாத்மா காந்தி சி.வி. அணியை தோற்கடித்தது.
சேலத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் ஹோலி கிராஸ் அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் மீனம்பார்க் அணியையும், ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் கைலாஷ் மானசரோவார் அணியையும் வீழ்த்தின. திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்ரீ ஜெயேந்திரா அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அட்டாமிக் எனர்ஜி சென்ட்ரல் அணியையும், சங்கர் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் செயின்ட் ஜான்ஸ் அணியையும் தோற்கடித்தன.