

பர்மிங்காம்: ஐபிஎஸ்ஏ உலக போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி. இதன் மூலம் தங்கம் வென்றுள்ளது இந்தியா.
பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 7-வது உலக பார்வையற்ற விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் உட்பட மொத்தம் பத்து விளையாட்டு பிரிவுகளில் வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியினர் இதில் பங்கேற்று விளையாடினர்.
அதில் இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியினர் இந்த தொடரில் விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்றனர். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 20 ஓவர்களில் 114 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்தது இந்தியா. அந்த அணியின் 8 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர் இந்திய அணியினர். மழை காரணமாக இந்தப் போட்டி டிஎல்எஸ் முறையில் 42 ரன்கள் என இலக்கு குறைக்கப்பட்டது. 3.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டியில் வென்றது இந்தியா. இதன் மூலம் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.