“இந்திய செஸ் விளையாட்டை மக்கள் கவனிக்க தொடங்குவார்கள் என நினைக்கிறேன்” - பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா | படம்: ட்விட்டர்
பிரக்ஞானந்தா | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

பாகு: இந்திய செஸ் விளையாட்டை மக்கள் கவனிக்க தொடங்குவார்கள் என தான் நினைப்பதாக செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டிக்கு பிறகு அவர் இதனை பகிர்ந்திருந்தார்.

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டைபிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தை சேர்ந்த இந்தியாவின் 18 வயதான இளம் வீரர் பிரக்ஞானந்தா இதில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில், அவரது முயற்சிக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். போட்டிக்கு பிறகு அவரை சூழ்ந்து கொண்ட சிறுவர்கள், அவரிடம் ஆவலாக ஆட்டோகிராப் பெற்றனர்.

“உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது சிறப்பானது. நான் ஆட்டத்தில் வெற்றி பெறவில்லை. ஆனால், செஸ் விளையாட்டில் இது வழக்கமான ஒன்று. அதிகளவில் சிறுவர்கள் செஸ் விளையாட்டின் மீது கவனம் செலுத்துவது நன்மைக்கே. அதன் மூலம் பலர் இதில் பங்கேற்று விளையாடுவார்கள். அதில் எனக்கு மகிழ்ச்சி. இந்திய செஸ் விளையாட்டை மக்கள் கவனிக்கத் தொடங்குவார்கள் என நினைக்கிறேன். நான் இறுதிப்போட்டி வரை முன்னேறி வருவேன் என எதிர்பார்க்கவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து இதில் விளையாடினேன். கார்ல்சன் உடன் செஸ் குறித்து நிறைய உரையாடினேன். அது நல்ல அனுபவமாக இருந்தது. அடுத்தடுத்து நிறைய தொடர்களில் விளையாடி வருவதால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த தொடருக்கு தயாராக உள்ளேன்” என பிரக்ஞானந்தா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in