

இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் முதன்மை விளம்பரதாரராகியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம். இதற்காக 3 ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஐபிஎல் பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியில் இந்தியா நகரங்களின் பெயர் இடம் பெற்றுள்ள 8 அணிகள் பங்கேற்கின்றன. செப்டம்பர் 19-ம் தேதி போட்டி தொடங்க இருக்கிறது.
இது தொடர்பாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன தலைமை செயல் அதிகாரி பவன் முஞ்சால் கூறியது: கால்பந்து போட்டி சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானது. இப்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு இந்தியாவிலும் கால்பந்து குறித்து ஆர்வம் அதிகரித்துள்ளது. முக்கியமாக இளைஞர்கள் இதனை அதிகம் விரும்புகின்றனர். இந்தியா வில் கால்பந்தை பிரபலப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இண்டியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எங்கள் நிறுவனமும் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
கால்பந்தை இந்திய அளவில் மேம்படுத்தி உள்நாட்டில் சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவோம். இந்திய கால்பந்து வரலாற்றில் இண்டியன் சூப்பர் லீக் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் என்றார்.