Published : 24 Aug 2023 02:04 PM
Last Updated : 24 Aug 2023 02:04 PM

மறக்க முடியுமா | இதே நாளில் இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்த இந்தியா!

கோப்புப்படம்

இந்திய கிரிக்கெட்டின் பொன்னான நாள் இன்றைய தினம். ஏனெனில், கடந்த 1971-ல் இதே ஆகஸ்ட் 24-ம் தேதி அன்று இங்கிலாந்து மண்ணில் அந்நாட்டு அணியை டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக இந்தியா வென்றது.

இதே ஆண்டில்தான் இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய ஸ்டேட் வங்கி ஊழியரான அஜித் வடேகர் இந்திய அணியின் கேப்டனாக்கப்பட்டார். சுனில் கவாஸ்கர் அணியின் ஜூனியர் வீரராக பெரிய ஆளுமையுடன் உள்ளே வருகிறார். ஏனெனில், இதற்கு முந்தைய கடும் சவாலான மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்ட கவாஸ்கர் சவால்களை ஊதித்தள்ளி அறிமுக டெஸ்ட் தொடரிலேயே 4 டெஸ்ட் போட்டிகளில் 774 ரன்கள் குவித்து கிரிக்கெட் உலகையே கலக்கிய நாட்களாகும் அது.

மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரையும் இந்திய அணி வடேகர் கேப்டன்சியில் 1-0 என்று வென்று விட்டு பெரிய ஆகிருதியுடனும் செல்வாக்குடனும் இங்கிலாந்து மண்ணில் வந்து இறங்குகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து தொடரின் முதல் டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்றது. அதில் பிஷன் பேடி, பகவத் சந்திரசேகர், தமிழக ஸ்பின்னர் எஸ்.வெங்கட்ராகவன் முறையே, 4,3, 2 விக்கெட்களைக் கைப்பற்ற இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 304 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணியில் கேப்டன் அஜித் வடேகர் 85 ரன்களை எடுக்க, குண்டப்பா விஸ்வநாத் 68 ரன்களை எடுத்தார். ஏக்நாத் சோல்கர் மிகச்சிறந்த பீல்டர். இவர் பேட்டிங்கில் 67 என்று பங்களிப்பு செய்ய இந்திய அணி 313 ரன்களை எடுத்து 9 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய சுழலுக்கு சிக்கி இங்கிலாந்து அணி, 191 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 183 ரன்கள்தான். ஆனால், கவாஸ்கர் மட்டுமே 53 ரன்களை எடுக்க பரூக் இன்ஜினீயர் 40 பந்துகளில் 35 ரன்களை அதிரடியாக எடுத்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை. இதனால் 8 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் என்று டெஸ்ட் ட்ரா ஆனது. 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. இந்த போட்டியும் டிரா ஆனது.

இந்நிலையில்தான் வாழ்வா? சாவா? என்ற நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இங்கிலாந்து முதலில் பேட் செய்து 355 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிஷன் சிங் பேடி, சந்திர சேகர், வெங்கட்ராகவன் தலா 2 விக்கெட்களையும், ஏக்நாத் சோல்கர் 3 விக்கெட்களையும் வீழ்த்தி இங்கிலாந்தை மட்டுப்படுத்தினர். தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் சுனில் கவாஸ்கர், அசோக் மன்கட் தொடக்க ஜோடி சடுதியில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். பிறகு கேப்டன் வடேகர் (48), திலிப் சர்தேசாய் (54) இணைந்து ஸ்கோரை 114 ரன்களுக்கு உயர்த்தினர். ஏக்நாத் சோல்கர் 44, இன்ஜினியர் 59, அபிட் அலி 26, வெங்கட் ராகவன் 24 என்று பங்களிப்பு செய்ய இந்திய அணி 284 ரன்கள் என்று 71 ரன்கள் பின்தங்கி ஆட்டமிழந்தது. இங்கிலாந்து கேப்டன் ரே இல்லிங்வொர்த் 5 விக்கெட்களைச் சாய்த்தார்.

ஆனால், இந்த இரண்டாவது இன்னிங்ஸ்தான் பகவத் சந்திரசேகர் என்ற லெக் ஸ்பின்னரின் முழு சுய ரூபமும் தெரியவந்தது. 18.1 ஓவர் 3 மெய்டன்கள் 38 ரன்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றி இங்கிலாந்தை 101 ரன்களுக்குச் சுருட்டினார். அதாவது இவரது கூக்ளிக்களை இங்கிலாந்து வீரர்களால் கணிக்க முடியவில்லை. கடுமையாக டான்ஸ் ஆடி விக்கெட்டுகளைக் கொடுத்து விட்டுச் சென்றனர். 173 ரன்களே இந்திய அணிக்கு வெற்றி இலக்கு.

ஆனால், மீண்டும் சுனில் கவாஸ்கர், அசோக் மன்கட் மலிவாக வெளியேற 4ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 76 ரன்கள் என்று அஜித் வடேகர், திலிப் சர்தேசாய் கையில் ஆட்டம் இருக்க முடிந்தது. 5ம் நாள் வந்தவுடன் தன் ஓவர் நைட் ஸ்கோரான 45 ரன்களில் கேப்டன் அஜித் வடேகரும் அவுட் ஆக 3 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாறியது.

ஆனால், குண்டப்பா விஸ்வநாத்தும், திலிப் சர்தேசாயும் ஸ்கோரை 124 ரன்களுக்கு உயர்த்திய போது சர்தேசாய் 40 ரன்களில் விக்கெட் கீப்பர் ஆலன் நாட்டிடம் கேட்ச் கொடுத்து டெரிக் அண்டர்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். சோல்கரையும் சொற்பமாக அண்டர் வுட் வீழ்த்த இந்திய அணி 134 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழக்க கொஞ்சம் டென்ஷன் அதிகமானது. ஆனால், குண்டப்பா விஸ்வநாத் 33 ரன்களையும் பரூக் இன்ஜினியர் 28 ரன்களையும் எடுக்க இந்தியா 174 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

அடுத்தடுத்த 2 அயல்நாட்டுத் தொடர்களை வென்ற ஒரே கேப்டனாக அஜித் வடேகர் எழுச்சி பெற்றார். இங்கிலாந்து மண்ணில் இந்தியா தொடரை வென்றது. இதன் பிறகு கபில் தேவ் கேப்டன்சியில்தான் அங்கு 1986-ல் வென்றது இந்திய அணி. என்ன இருந்தாலும் இந்த முதல் வெற்றியை மறக்க முடியுமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x