மாநிலங்களுக்கு இடையிலான தேசிய டேபிள் டென்னிஸ்: 6-வது முறையாக பட்டம் வென்றார் ஷரத் கமல்

ஷரத் கமல்
ஷரத் கமல்
Updated on
1 min read

விசாகப்பட்டிணம்: மாநிலங்களுக்கு இடையிலான தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வந்தன. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த ஷரத் கமல் 6-வது முறையாக பட்டம் வென்றார்.

இறுதிப் போட்டியில் அவர், 11-6, 6-11, 15-13, 11-6, 7-11, 11-5 என்ற செட் கணக்கில் ஆர்பிஐ-யைச் சேர்ந்த மனுஷ் ஷாவை தோற்கடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற ஷரத் கமலுக்கு பரிசுத் தொகையாக ரூ.96 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் 120 புள்ளிகளும் அவருக்கு வழங்கப்பட்டன. ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த ரோனித் பன்ஜா, ஆகாஷ் பால் ஜோடி 11-9, 11-8, 11-5 செட் கணக்கில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை சேர்ந்த தீபித் ஆர்.பாட்டீல், கே.ஜே. ஆகாஷ் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆர்பிஐ-யின் ஸ்ரீஜா அகுலா 11-6, 11-7, 13-11, 11-5 என்றசெட் கணக்கில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த மவுமிதா தத்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்ரீஜா அகுலாவுக்கு இது முதல் பட்டமாக அமைந்தது. அவருக்கு ரூ.96 ஆயிரம் பரிசுத் தொகையும் 120 புள்ளிகளும் வழங்கப்பட்டன. 2-வது இடம் பிடித்த மவுமிமா தத்தா 80 புள்ளிகளையும் ரூ.48 ஆயிரம் பரிசுத் தொகையையும் பெற்றார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த சுதிர்தா முகர்ஜி, பாய்ஷ்யா ஜோடி 11-5, 11-2, 6-11, 12-10 என்ற செட் கணக்கில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தை சேர்ந்த சுகானா ஷைனி, யஷஸ்வின் கோர்படே ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் ஆர்பிஐ-யின் மனுஷ் ஷா, தியா சித்தலே ஜோடி கோப்பையை வென்றது. இந்த ஜோடி இறுதிப் போட்டியில் 11-8, 11-7, 11-3 என்ற செட் கணக்கில் ரயில்வே விளையட்டு மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த ஆகாஷ் பால், பாஷ்ய்ஷா ஜோடியை தோற்கடித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in