எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சம் பரிசு

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்: பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சம் பரிசு
Updated on
1 min read

சென்னை: 94-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

வரும் செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் நடப்பு சாம்பியனான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்திய கடற்படை, இந்திய ரயில்வே, ஹாக்கி கர்நாடகா, மத்திய தலைமைச் செயலகம் ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, சிஏஜி ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.

போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறுகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 2 அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். செப்டம்பர் 2-ம் தேதி அரை இறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி செப்டம்பர் 3-ம் தேதி மின்னொளியில் நடைபெறுகிறது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசாக வழங்கப்பட உள்ளன. அரை இறுதி போட்டிகளில் தோல்வியை சந்திக்கும் இரு அணிகளுக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

காட்சி போட்டி: இந்த தொடரையொட்டி எம்சிசி அணி, தி மெர்காரா டவுன்ஸ் கோல்ஃப் கிளப் அணியுடன் மோதும் காட்சி போட்டி இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in