

பாகு: நடப்பு உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் மற்றும் இந்தியாவின் பிரக்ஞானந்தா விளையாடி வருகின்றனர். இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது.
உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபன் பிரிவில் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் விளையாடி வருகிறார் பிரக்ஞானந்தா. உலகின் முதல் நிலை சதுரங்க ஆட்டக்காரராக கார்ல்சன் திகழ்கிறார். அவர் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அதனால் அவரை எதிர்கொள்ளும் பிரக்ஞானந்தாவின் செயல்பாடு இதில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கு முன்னர் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தை யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் நேரலையில் லட்ச கணக்கான பேர் பார்த்திருந்தனர். இந்த சூழலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் சமனில் முடிந்தது. அதனால் இருவரும் புள்ளிகளை பகிர்ந்து கொண்டனர். நாளை இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் வெள்ளை நிற காய்களுடன் கார்ல்சன் விளையாட உள்ளார்.