

ஃபிடேவின்: நடப்பு உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா. முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் அவர் விளையாட உள்ளார்.
உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விளையாடிய இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் இன்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியர் என்ற சாதனையை அவர் இதன் மூலம் படைத்துள்ளார்.