IRE vs IND | முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்த ரிங்கு சிங்: ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தல்!

ரிங்கு சிங் | படம்: ட்விட்டர்
ரிங்கு சிங் | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

டப்ளின்: தனது முதல் சர்வதேச இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்து, ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்.

பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் அறிமுக வீரராக ரிங்கு சிங் களம் கண்டார். முதல் போட்டியில் பேட் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் அவர் பேட் செய்தார்.

21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அவரது இன்னிங்ஸில் அடங்கும். இந்த இன்னிங்ஸில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 180.95. கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி ஐந்து பந்துகளில் 5 சிக்ஸர்களை பதிவு செய்து கவனம் ஈர்த்தவர். சிறந்த ஃபினிஷர் என அவரை ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் அவர் உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.

“நான் இந்த தருணத்தை சிறப்பானதாக உணர்கிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் செய்ததை இங்கும் செய்ய முயற்சித்து வருகிறேன். நான் நம்பிக்கையுடன் உள்ளேன். அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன். கேப்டன் சொல்லை கேட்கிறேன். 10 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். எனது முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆட்ட நாயகன் விருது பெற்றதில் மகிழ்ச்சி” என அவர் தெரிவித்தார். இந்தத் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in