Published : 21 Jul 2014 03:33 PM
Last Updated : 21 Jul 2014 03:33 PM

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் விடுதியில் பேய் நடமாட்டம் என அச்சம்

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லண்டனில் உள்ள லாங்காம் 5 நட்சத்திர விடுதியில் பேய் நடமாடுவதாக இங்கிலாந்து வீரர்கள் சிலர் அச்சம் தெரிவித்ததோடு, உடனடியாக விடுதியை மாற்றும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விடுதி 1865 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இப்போது அது மர்ம நடமாட்டம் இருக்கும் விடுதியாக மாறிவிட்டது இனி இங்கு தங்க முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி, மற்றும் பெண் ஸ்னேகிதிகள் உட்பட வீரர்கள் சிலரே இரவு நேரங்களில் மர்ம நிகழ்வுகள் நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஸ்டூவர்ட் பிராட் வெளிப்படையாக தனது அச்சத்தைத் தெரிவித்துள்ளார்.

"இலங்கை தொடரின் போது நான் அறையை மாற்ற வேண்டியிருந்தது. அறை மிகவும் உஷ்ணமாக இருந்தது, என்னால் உறங்க முடியவில்லை. குளியலறையில் உள்ள பைப்கள் தானாகவே திறந்து கொள்கின்றன, மூடுகின்றன. நான் விளக்கைப் போட்டவுடன் பைப் தானாகவே மூடிவிடுகிறது. மீண்டும் விளக்கை அணைத்தவுடன் பைப் தானாகவே திறந்து கொள்கிறது.

என்னுடைய ஸ்னேகிதி பியேலியும் பயந்து விட்டாள். மொயீன் அலியின் அறையிலும் இதே போல் நடந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடரின் போது பரவாயில்லை, நன்றாக உறங்கினேன், ஆனால் இலங்கைக்கு எதிரான தொடரின் போது மிகவும் கடினமான இரவுகளாக அமைந்தது. ஒருநாள் இரவு 1.30 மணி அளவில் எனக்கு விழிப்பு வந்தது. ஆனால் என் அறையில் மர்மமான முறையில் வேறு ஒருவர் இருப்பது போலவே நான் உணர்ந்தேன், நடமாட்டம் இருப்பதை என்னால் உணர முடிந்தது.

பென் ஸ்டோக்ஸ் தங்கியிருக்கும் அறை 3வது தளத்தில் உள்ளது, அங்கு இதைவிட மர்மமான நிகழ்வுகள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அறைகளில் ஏதோ ஒன்று மர்மமான முறையில் நடக்கிறது என்பது மட்டும் உண்மை”

என்று ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

லண்டன் லாங்காம் விடுதியில் புகழ் பெற்ற இலக்கியப் படைப்பாளிகள் தங்கியுள்ளனர். மார்க் ட்வெய்ன், ஆஸ்கார் ஒயில்டு, மற்றும் ஆர்தர் கானன் டாய்ல் இந்தப் பட்டியலில் அடங்குவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x