

'ஸ்போர்ட்ஸ்டார்' இதழ் புதிய வடிவமைப்புடன் வெளியாகி உள்ளது. இதற்கான விழா டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இதில் பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, 'தி இந்து' குழுமத்தின் இணைத் தலைவர் மாலினி பார்த்தசாரதி, முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய 'தி இந்து' குழுமத்தின் இணைத் தலைவர் மாலினி பார்த்தசாரதி, ஸ்போர்ட்ஸ்டார் இதழின் வரலாற்றை நினைவு கூர்ந்தார்.
முதன்முதலில் 1947 செப்டம்பர் 10-ல் ஸ்போர்ட் அண்ட் பாஸ்டைம் (Sport and Pastime) என்ற பெயரில் அந்த இதழ் வெளியானதையும் அப்போது எத்தனையோ வளரும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஊக்கமாக அந்த இதழில் இடம்பெற்ற கட்டுரைகளும், புகைப்படங்களும் அமைந்ததையும் அவர் பெருமிதத்துடன் சுட்டிக் காட்டினார்.
பி.வி.சிந்து பேசும்போது, "ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்போர்ட்ஸ்டார் இதழின் முதல் பக்கத்தில் எனது புகைப்படத்தைப் பார்த்தபோது நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். தி இந்து நாளிதழும், ஸ்போர்ட்ஸ்டார் இதழும் இந்தியாவில் விளையாட்டை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றி இருக்கிறது" என்றார்.
"ஓர் இளம் விளையாட்டு வீரர் ஊடக அங்கீகாரம் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் நான் ஆல் இங்கிலாந்து பட்டத்தை வென்றபோது எனது வீட்டாரை தொலைபேசியில் அழைத்து எனது புகைப்படம் செய்தித்தாள்களில் பிரசுரமாகியிருக்கிறதா என ஆவலுடன் கேட்டுத் தெரிந்து கொண்டேன்" என பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் கூறினார்.
விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் 'ஸ்போர்ட்ஸ்டார்' இதழின் பெருமையை எடுத்துரைத்தனர்.