Published : 20 Aug 2023 06:39 AM
Last Updated : 20 Aug 2023 06:39 AM

பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து | வெண்கலப் பதக்கம் வென்றது ஸ்வீடன் - இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - ஸ்பெயின்

பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வீடன் அணியினர்.

பிரிஸ்பன்: பிபா மகளிர் உலகக் கோப்பைகால்பந்து தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஸ்வீடனுடன் மோதியது.

இதில் ஸ்வீடன் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்துடன் தொடரை நிறைவு செய்தது. ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் பாக்ஸ் பகுதிக்குள் வைத்து ஸ்வீடன் வீராங்கனை பிளாக்ஸ்டீனியஸை ஆஸ்திரேலியாவின் கிளேர் ஹன்ட் பஃவுல் செய்தார்.

இதனால் ஸ்வீடன் அணிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. இதை ஃப்ரிடோலினா ரோல்ஃபோ கோலாக மாற்ற ஸ்வீடன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 62-வது நிமிடத்தில் பிளாக்ஸ்டீனியஸிடம் இருந்து கிராஸை பெற்ற கொசோவரே அஸ்லானி பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து உதைத்த பந்து கோல் வலையை துளைத்தது. இதனால் ஸ்வீடன் அணியின் முன்னிலை 2-0 என அதிகரித்தது.

ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பலமுறை இலக்கை நோக்கி பந்தைகொண்டு சென்ற போதிலும் அவற்றை கோல்களாக மாற்ற முடியாமல் போனது. முடிவில் ஸ்வீடன் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த அணி உலகக் கோப்பை வரலாற்றில் வெண்கலப் பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

சிட்னியில் உள்ள ஒலிம்பிக் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளும் உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. ஸ்பெயின் தனது அரை இறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை தோற்கடித்து இருந்தது. அதேவேளையில் இங்கிலாந்து3-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x