Published : 20 Aug 2023 06:43 AM
Last Updated : 20 Aug 2023 06:43 AM
சென்னை: ஃபிடேவின் உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா கால் இறுதி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியை 5-4 என்ற கணக்கில் சடன்டெத் டை பிரேக்கில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் பிரக்ஞானந்தா கடும் பின்னடைவை சந்தித்திருந்தார். ஆனால் சில அசாத்தியமான நகர்வுகளை மேற்கொண்டு ஆட்டத்தை டை பிரேக்கர் வரை கொண்டு சென்று வெற்றியை வசப்படுத்தினார். உலகக் கோப்பை செஸ் தொடரில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகுஅரை இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் 17 வயதான பிரக்ஞானந்தா.
அர்ஜூன் எரிகைசிக்கு எதிராக பிரக்ஞானந்தா விளையாடிய ஆட்டத்தை அவரது தாய் நாகலட்சுமி போட்டி நடைபெற்ற பகுதியில் சற்று தள்ளி அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதும் நாகலட்சுமி உணர்ச்சி பொங்க ஆனந்த கண்ணீர் சிந்தியபடி அதனை புடவையால் துடைத்தார். தொடர்ந்து பிரக்ஞானந்தா வெற்றி குறித்து பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது அவரது அருகே நாகலட்சுமி சிரித்தபடி நின்றிருந்தார். தனது மகனைபெருமையாக அவர், பார்ப்பது போன்று அமைந்துள்ள உணர்ச்சிகரமான இந்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
தனது தாய் நாகலட்சுமி குறித்து பிரக்ஞானந்தா கூறும்போது, “என் அம்மா எப்போதும் எனக்கு உறுதுணையாக இருப்பார். நான் தோல்வியை சந்தித்தால் அவர், என்னை அமைதிப்படுத்த முயற்சிப்பார். எனக்கு மட்டும் அல்ல எனது சதோரிக்கும் அவர், ஆதரவாக இருப்பார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT