

பிரான்ஸுக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு சேர்த்து 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய கையோடு சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் நைஜீரிய பின்கள வீரர் ஜோசப் யோபு.
கடந்த 13 ஆண்டுகளாக நைஜீரியாவின் தலைசிறந்த பின்கள வீரராகத் திகழ்ந்த ஜோசப் யோபுவுக்கு கடைசி போட்டி மறக்க முடியாத போட்டியாக அமைந்துவிட்டது. இந்தப் போட்டியில் அவர் ஓன் கோலடித்ததே அதற்கு காரணம்.
சர்வதேச போட்டியிலிருந்து விடைபெற்றுவிட்ட அவர், கிளப் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்தவுள்ளதாகவும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
நைஜீரிய அணிக்காக 100 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரரான யோபு, 3 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இது தொடர்பாக அந்த அணியின் ஸ்டிரைக்கர் ஷோலா அமீபி கூறுகையில், “கடைசி போட்டி யோபுவுக்கு இனிப்பும் கசப்பும் கலந்ததாக அமைந்துவிட்டது. கடந்த 13 ஆண்டுகளாக எங்கள் அணியின் தலைசிறந்த தலைவராகவும், பின்களத்தின் தூணாகவும் இருந்துள்ளார். அவருடைய இடத்தை நிரப்புவது மிகக் கடினமானது” என்றார்.