

டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துகிறார் பும்ரா. காயத்திலிருந்து மீண்டு களத்துக்கு திரும்பியுள்ளார் அவர்.
29 வயதான பும்ரா, கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 30 டெஸ்ட், 72 ஒருநாள் மற்றும் 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 319 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு முதுகு வலி காரணமாக அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.
சுமார் 11 மாத காலத்துக்கு பிறகு விளையாட அணிக்கு திரும்பியுள்ளார். ஆசிய கிரிக்கெட் கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர் விரைவில் நடைபெற உள்ள சூழலில் இந்திய அணிக்கு அவரது வரவு சாதகம் தான்.
“ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நெருங்கும் சூழலில் இப்போதைக்கு டெஸ்ட் போட்டிகளில் நாம் விளையாடவில்லை என்பதை அனைவரும் அறிவோம். அதே நேரத்தில் நான் டி20 போட்டிகளுக்காக தயாராகவில்லை. காயத்தில் இருந்து மீண்டதும் உலகக் கோப்பை தொடரை இலக்காக வைத்து பந்து வீசி பயிற்சி செய்தேன். 10, 12 மற்றும் சமயங்களில் 15 ஓவர்கள் வரை தொடர்ச்சியாக வீசி பயிற்சி செய்தேன். அதனால் டி20 போட்டிகளில் விளையாடுவது எளிது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாட விரும்புகிறேன். நீண்ட பிரேக்குக்கு பிறகு அணிக்குள் திரும்புகிறேன். இந்த அளவுக்கு ஆட்டத்தில் இருந்து விலகி இருந்தது இல்லை. நான் அதே பழைய பும்ராவாக வந்துள்ளேன். தேசிய கிரிக்கெட் அகாடமியில் கடினமாக பயிற்சி செய்தேன். ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்”