

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது.
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. முகமது சமி 14, இஷாந்த் சர்மா 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
2-வது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணி மேலும் 5 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் முகமது சமி (19 ரன்கள்). இதனால் 91.4 ஓவர்களில் 295 ரன்களோடு முடிவுக்கு வந்தது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ். இஷாந்த் சர்மா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
குக் ஏமாற்றம்
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் கேப்டன் அலாஸ்டர் குக்கும், ராப்சனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 10.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 22 ரன்கள் சேர்த்தது. குக் 10 ரன்களிலும், ராப்சன் 17 ரன்களிலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் சோபிக்காத குக், இந்த முறையும் இங்கிலாந்து ரசிகர்களை ஏமாற்றினார். பின்னர் வந்த இயான் பெல் 16 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, 31.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது இங்கிலாந்து.
கேரி பேலன்ஸ் சதம்
இதையடுத்து கேரி பேலன்ஸுடன் இணைந்தார் ஜோ ரூட். இங்கிலாந்தை சரிவிலிருந்து மீட்கப் போராடிய இந்த ஜோடி, 14.5 ஓவர்கள் களத்தில் நின்று 43 ரன்கள் சேர்த்தது. 50 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்த ஜோ ரூட், ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற, மொயீன் அலி களம்புகுந்தார். மறுமுனையில் பொறுப்போடு ஆடிய கேரி பேலன்ஸ் 115 பந்துகளில் அரைசதம் கண்டார்.
தேநீர் இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய பாலன்ஸ், அலி ஜோடி, ஸ்கோரை ஸ்திரப்படுத்தியது. 186 பந்துகளில், பாலன்ஸ் சதத்தைக் கடந்தார். அடுத்த சில ஓவர்களில் முரளி விஜய் வீசிய பந்தில், அலி 32 ரன்களுக்கு வெளியேறினார். `
பாலன்ஸ் 110 ரன்கள் எடுத்திருந்த போது, புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில், தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேற ஆட்டத்தில் மீண்டும் இந்தியாவின் கை மேலோங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 219 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்தது. ப்ரையர் மற்றும் ப்ளங்கெட் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட இங்கிலாந்து 76 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா, முரளி விஜய் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.