Published : 16 Aug 2023 07:29 AM
Last Updated : 16 Aug 2023 07:29 AM
கொழும்பு: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா அறிவித்துள்ளார். இருந்தபோதும் சர்வதேச டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ந்து இலங்கை அணிக்காக களமிறங்குவார்.
26 வயதான வனிந்து ஹசரங்கா இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளிலும் பங்கேற்று பிரகாசித்து வருகிறார்.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறப் போவதாக நேற்று அவர் அறிவித்தார். இதுதொடர்பாக தனது முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் (எஸ்எல்சி) தெரிவித்து விட்டதாகவும், தனது முடிவை வாரியம் ஏற்றுக் கொண்டதாகவும் ஆல்-ரவுண்டர் வனிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டி, சர்வதேச டி20 போட்டி, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 போட்டிகளில் பங்கேற்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமைச் செயல் அதிகாரி ஆஷ்லி டி சில்வா கூறும்போது, “டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்து எங்களுக்கு கடிதத்தை வனிந்து ஹசரங்கா அனுப்பியுள்ளார். அவரது முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். ஆனாலும் ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் இலங்கை அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடுவார்" என்றார்.
2020-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஹசரங்கா, கடைசியாக 2021-ல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
அதேநேரத்தில் இதுவரை 48 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்களை அவர் கைப்பற்றியுள்ளார். மேலும் 832 ரன்களையும் அவர் விளாசியுள்ளார். இதில் 4 அரை சதங்கள் அடங்கும்.
அதேபோல், 58 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்களை அவர் சாய்த்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 533 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு அரை சதமும் அடங்கும்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் விளையாடி வருகிறார். மேலும் செயின்ட் கிட்ஸ் அன்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் (சிபிஎல்), குவெட்டா கிளாடியேட்டர்ஸ் (பிஎஸ்எல்), கண்டி ஃபால்கன்ஸ் அன்ட் ஜாப்னா கிங்ஸ் (எல்பிஎல்), டெசர்ட் வைப்பர்ஸ் (ஐஎல்டி20), வாஷிங்டன் ஃப்ரீடம் (எம்எல்சி) அணிகளுக்காக அவர் டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT