

லண்டன்: இங்கிலாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 4 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2025-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணி கடைசியாக இங்கிலாந்துக்கு 2003-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் விளையாட வந்திருந்தது. அதன்பிறகு இரு அணிகளும் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்நிலையில், ஜிம்பாப்வே - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய (இசிபி) தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் கவுல்ட் கூறும்போது, “ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துடன் நெருக்கமான உறவில் இருக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. இதையடுத்து 2 அணிகளிடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த டெஸ்ட் போட்டி 2025-ம் ஆண்டு மே 28 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை நடத்தும் இடம் இன்னும் முடிவாகவில்லை. இது 4 நாள் டெஸ்ட் போட்டியாக இருக்கும்" என்றார்.