Published : 27 Nov 2017 06:56 PM
Last Updated : 27 Nov 2017 06:56 PM

ஜானி பேர்ஸ்டோ - பேங்க்ராப்ட் ‘தலைமுட்டு’ சர்ச்சை: இங்கிலாந்து பயிற்சியாளர் பெய்லிஸ் காட்டம்

பெர்த்தில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் பேங்கிராப்டை ‘பார்’ ஒன்றில் சந்தித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ அவரைத்தலையால் முட்டியதாக எழுந்த சர்ச்சை தற்போது பெரிதாகியுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து, களத்துக்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பயிற்சியாளர் டிரெவர் பெய்லிஸ் காட்டமாக கடிந்து கொண்டுள்ளார். அதுவும் பிரிஸ்பன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து தோல்வி தழுவியதையடுத்து இந்த விவகாரம் தலைதூக்கியுள்ளது.

இந்தச் சம்பவத்தை அன்று பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் போது பேர்ஸ்டோ ஒரு இன்னிங்சை கட்டமைக்க முயற்சி செய்து கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய வீரர்கள் கையிலெடுத்து ஸ்லெட்ஜிங் செய்ததால் பேர்ஸ்டோ தேர்ட்மேனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததாக ஸ்மித்தே பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார், இதனையடுத்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் வீரர்கள் நடத்தை குறித்து காட்டமாக சில கருத்துகளை தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பேங்கிராப்ட் கூறும்போது, “நான் மிகவும் சுமூகமான ஒரு உரையாடலை அவருடன் தொடக்கினேன், ஆனால் அவர் பதிலுக்கு என்னைத் தலையால் முட்டினார். நான் கைகுலுக்குவார், தழுவுவார் என்று எதிர்பார்த்த போது தலையால் முட்டியது எனக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால் அதன் பிறகும் நல்ல முறையில் உரையாடினோம், மது அருந்தினோம், மகிழ்ச்சியாகவே பேசிக் கொண்டிருந்தோம், இந்தச் சம்பவம் அளவுக்கு அதிகமாக ஊதிப்பெருக்கப் படுகிறது” என்றார்.

ஆனால் இங்கிலாந்து பயிற்சியாளர் டிரவர் பெய்லிஸ் கூறும்போது, “களத்திற்கு வெளியே இன்னும் கொஞ்சம் சாதுரியமாக இங்கிலாந்து வீரர்கள் நடந்து கொள்ள வேண்டும். எந்த ஊரடங்கு உத்தரவையும் பேர்ஸ்டோ மீறிவிடவில்லை, அதனால் ஒழுங்கு நடவடிக்கை என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை.

ஆனால் இது ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமல்லாமல் ஊடகங்களுக்கும் தீனி போடுவதாக அமைந்துள்ளது. இதனால் கிரிக்கெட்டை விடுத்து தேவையில்லாத விஷயங்கள் முன்னிலை பெறுகின்றன. இது மிகவும் ஏமாற்றத்துக்குரியது. இதைத்தான் நாம் சிறந்த முறையில் கையாள வேண்டும் என்கிறேன். சின்ன விஷயமாக இருந்தாலும் இத்தகைய சூழ்நிலைகளில் சிக்குவதைத் தவிர்க்க வேண்டும்.

கிரிக்கெட்டை ஆட விரும்புகிறோம், ஆனால் இந்த விவகாரம் எதிரணியினருக்கு நம் மீது இன்னும் நெருக்கடி கொடுக்க ஒரு ஆயுதத்தை வழங்கியுள்ளது. பேர்ஸ்டோ செய்ததில் எந்த வித தீங்கான எண்ணமும் இல்லை. ஆனால் இதனையடுத்து வீரர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இரவில் வெளியே சென்று அமைதியாகத் திரும்புவது நல்லது. முட்டாள்தனமாக எதுவும் செய்து விடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதாவது அந்த எச்சரிக்கை குடிக்கக் கூடாது என்பதாக இருந்தாலும் நல்லதே” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x