

சென்னை: தமிழ்நாடு அட்யா பட்யா சங்கத்தின் சார்பில் ஆடவர், மகளிர் சப்-ஜூனியர் மாநில சாம்பியன்ஷிப் போட்டி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் நடைபெற்றது. இதில் 21 மாவட்டங்களை சேர்ந்த ஆடவர் அணிகளும், 18 மகளிர் அணிகளும் பங்கேற்றன. ஆடவருக்கு இறுதிப் போட்டியில் தேனி - திருவள்ளூர் அணிகள் மோதின. இதில் தேனி அணி 37-16, 34-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற முதலிடம் பெற்றது.
மகளிர் பிரிவிலும் தேனி மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. அந்த அணி இறுதிப் போட்டியில் 34-19, 26-14 என்ற நேர் செட்டில் திருவள்ளூர் அணியை வீழ்த்தியது. ஆடவர் பிரிவில் 3-வது இடத்தை ஈரோடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் பகிர்ந்து கொண்டன. மகளிர் பிரிவில் 3-வது இடத்தை கன்னியாகுமரி, ஈரோடு மாவட்ட அணிகள் பகிர்ந்து கொண்டன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி கோப்பைகளை வழங்கினார். ஆடவர் பிரிவில் சிறந்த வீரராக தேனி அணியின் தீபக்கும், மகளிர் பிரிவில் கோபிகாவும் (தேனி அணி) தேர்வு செய்யப்பட்டனர்.