

இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் நார்த்தாம்ப்டன் ஷயர் அணிக்காக விளையாடி வரும் அதிரடி இந்திய வீரர் பிரித்வி ஷா, அண்மையில் 244 ரன்களை விளாசிய பிறகு நேற்று டுர்ஹாம் அணிக்கு எதிரான ஒன் டே கோப்பை ஒருநாள் போட்டியில் மீண்டும் ஒரு அதிரடி சதம் பதிவு செய்து தன் அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.
முதலில் பேட் செய்த டுர்ஹாம் அணி 198 ரன்களுக்கு சுருண்டது. இலக்கை விரட்டிய நார்த்தாம்ப்டன் ஷயர் அணி 25.4 ஓவர்களில் ஓவருக்கு 7.94 என்ற ரன் ரேட்டில் 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா, 76 பந்துகளில் 15 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 125 ரன்களை விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.
15 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என்றால் 102 ரன்களை வெறும் பவுண்டரி மற்றும் சிக்சர்களிலேயே அவர் எடுத்திருந்தார். அன்று 244 ரன்களை விளாசிய பிறகு மீண்டும் அடுத்த போட்டியிலேயே ஒரு சதம் எடுத்து அசத்தி, தடுமாறி வரும் இந்திய அணியின் இரும்புக் கதவுகளை மீண்டும் ஒரு முறை பலமாக அசைத்துப் பார்த்துள்ளார் பிரித்வி ஷா. இந்த இன்னிங்ஸின் போது 21 ரன்களில் அவரை அவுட் செய்யும் வாய்ப்பு நழுவ விடப்பட்டது. அதனை அருமையாகப் பயன்படுத்தி தனது நாளாக மாற்றிக் கொண்டார். 68 பந்துகளில் சதம் கண்ட பிரித்வி ஷா, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தனது 10-வது சதத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து நார்த்தாம்ப்டன் ஷயரின் பயிற்சியாளர் ஜான் சேட்லர், ‘பிரித்வி ஷா ஒரு சூப்பர் ஸ்டார்’ என்றார் நெகிழ்ச்சியுடன். இந்த இன்னிங்ஸை தொடங்கிய போது ‘ப்ளே’ என்று நடுவர் சொன்னவுடனேயே முதல் ஓவரில் 3 பவுண்டரிகளை அடித்தார். பிறகு அவர் 21 ரன்கள் எடுத்த போது கடினமான கேட்ச் ஒன்று விடப்பட்டது. 8 ஓவர்களில் 50 ரன்களை நார்த்தாம்ப்டன் எட்டியது.
இவர் ஒரு முனையில் இருக்கும் போதே ஓரே ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்தன. ஆனால், அசராத பிரித்வி ஷா, ட்ரிவாஸ்கிஸ் என்ற பவுலரை 2 சிக்சர்களை தொடர்ச்சியாக விளாசினார். 41 பந்துகளில் அரைசதம் கண்டார்.
இதில் போர்த்விக் என்பவர் வீசிய முதல் ஓவரில் 24 ரன்களை விளாசினார். அதில் 5 பந்துகள் நேர் பவுண்டரிக்கு சென்றன என்றால் பிரிதிவி ஷா எப்படி பிரமாதமாக ஸ்ட்ரெய்ட் பேட் ஆடுகிறார் என்பது புரியவரும். 68 பந்துகளில் சதம் கண்ட ஷா, எப்படி 3 பவுண்டரிகளுடன் ஓவரைத் தொடங்கினாரோ அதே போல் 3 பவுண்டரிகளுடன் பினிஷிங் செய்து இலக்கைக் கடந்து வெற்றி பெறச் செய்தார்.
இந்தியாவில் ஆடுவதை விட வெளிநாட்டில் அதுவும் இங்கிலாந்து பிட்ச்களில் தன்னை நிரூபித்தால் இந்திய அணிக்கு அவர் மீண்டும் வரும் பாதை எளிது. இவரைப்போன்ற திறமைசாலிகள் எப்படியாவது இந்திய அணிக்கு மீண்டும் வரவேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது.