Published : 13 Aug 2023 05:27 AM
Last Updated : 13 Aug 2023 05:27 AM
பிரிஸ்பன்: பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 7-6 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆஸ்திரேலிய அணி அரை இறுதிக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.
பிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நேற்று ஆஸ்திரேலியா - பிரான்ஸ் அணிகள் பிரிஸ்பன் மைதானத்தில் மோதின. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 10-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இதில் விக்கி பெச்சோ உதைத்த பந்தை ஆஸ்திரேலிய அணியின் டிபன்டர் அலன்னா கென்னடி தடுக்க முயன்றபோது அவரது தலையில் பட்டு சுயகோலாக மாறியது. ஆனால் கள நடுவர் மரியா கார்வஜல் இந்த கோலை மறுத்தார். இதற்கு காரணம் அலன்னா கென்னடியின் பின்புறம் நின்ற ஆஸ்திரேலிய அணியின் முன்கள வீராங்கனையான கெய்ட்லின் ஃபோர்டின் டி-ஷர்ட்டை பிரான்ஸ் கேப்டன் வெண்டி ரெனார்ட் பிடித்து இழுத்து கீழே தள்ளியதுதான்.
சுயகோல் அடித்த அதிர்ச்சியில் இருந்த ஆஸ்திரேலிய அணி, நடுவரின் முடிவால் பெருமூச்சு விட்டது. இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. கூடுதல் நேரங்களின் முடிவிலும் கோல் அடிக்கப்படாததால் ஆட்டம் 0-0 என்ற நிலையில் இருந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது.
இதில் 5 வாய்ப்புகளில் இரு அணிகளும்தலா 4 கோல்கள் அடித்தன. இதையடுத்து சடன் டெத்தில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக கோல்கள் அடித்தன. முதல் 3 வாய்ப்புகளிலும் இரு அணிகளும் கோல் அடித்து அசத்தின. 4-வது வாய்ப்பில் பிரான்ஸ் அணியின்கென்சா டாலி உதைத்த பந்து கோல்கம்பத்தின் மீது பட்டு விலகிச் சென்றது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் கிளேர் ஹன்ட் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்த வாய்ப்பில் பிரான்ஸ் அணியின் விக்கி பெச்சோ அடித்த பந்து கோல் கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்றது. ஆனால் ஆஸ்திரேலிய அணி தனது வாய்ப்பை கோலாக மாற்றியது. கோர்ட்னி வைன் உதைத்த பந்து கோல்வலைக்குள் பாய்ந்து செல்ல ஆஸ்திரேலிய அணி 7-6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
இங்கிலாந்து அசத்தல்: சிட்னியில் நடைபெற்ற மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - கொலம்பியா அணிகள் மோதின. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் லாரன் கேம்ப் (45 6 நிமிடம்), அலிசியா ரூஸோ (63-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். அரை இறுதி சுற்றில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT