

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்கும் கடினமான நிலையில் இந்திய அணி உள்ளது என்று தொடக்க வீரர் ஷிகர் தவன் தெரிவித்துள்ளார்.
சவுத்தாம்ப்டனில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 445 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து இந்தியா 112/4 என்று தடுமாறி வருகிறது.
ஷிகர் தவன் 37 ரன்களுக்கு அவுட் ஆனார். அஜின்கியா ரஹானே 18 ரன்களுடனும் ரோகித் சர்மா 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 5ஆம் நாள் இந்தியாவின் போராட்டம் குறித்து ஷிகர் தவன் கூறும்போது, “5ஆம் நாள் மிகக் கடினம். இங்கிலாந்து வலுவான நிலையில் உள்ளது. இருந்தாலும் களத்தில் இருக்கும் இரு வீரர்கள் எவ்வளவு நேரம் ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்து ஆட்டத்தின் போக்கு மாறலாம்.
பிட்சில் பந்துகள் சற்றே திரும்புகின்றன, கொஞ்சம் ஸ்விங்கும் ஆகிறது, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஒரு இடம் உள்ளது, அங்கு பிட்ச் ஆனால் பந்தின் போக்கு கணிக்க முடியாததாகவுள்ளது. அந்த இடத்தில் பிட்ச் ஆகாமல் வெளியே பிட்ச் ஆனாலும் திரும்புகிறது. எனவே பேட்டிங் மிகவும் கடினம்” என்று கூறிய தவன், தான் அவுட் ஆனது பற்றி ‘நல்ல பந்து விழுந்து விட்டது என்றால் நாம் அதிகம் செய்வதற்கொன்றுமில்லை’என்றார்.
நானும், விஜய்யும் இணைந்து நல்ல துவக்கத்தைக் கொடுக்க முடியாது போவது மிக வருத்தமளிக்கிறது. முரளி விஜய் இந்தத் தொடரில் அபாரமாக ஆடியுள்ளார். நான் வலைப்பயிற்சியில் கடினமாக உழைத்து வருகிறேன்.
உடலை விட்டு மட்டை அதிகம் விலகிச்செல்லாமல் ஆடினேன், ஆனாலும் நல்ல பந்துகள் வரும்போது ஒன்றும் செய்ய முடிவதில்லை, என்றார் ஷிகர் தவன்.